நடிகை கடத்தல் வழக்கு: விசாரணைக்கு நடிகர் திலீப் ஆஜர்
பிரபல மலையாள நடிகையை 2017-ம் ஆண்டு காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.;
சமீபத்தில் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் அளித்த பேட்டியில், 'நடிகை வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியை கொலை செய்ய திலீப் திட்டமிட்டார் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் பரபரப்பானது. திலீப் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, திலீப் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி 23 (நேற்று) 24 மற்றும் 25-ந் தேதிகளில் திலீப் உட்பட 6 பேரும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் 27-ம் தேதி வரை திலீப்பை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து நடிகர் திலீப், கமலச்சேரி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நேற்று காலை 9 மணிக்கு ஆஜரானார். அவரிடம் பலமணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.