கூட்ட நெரிசலில் சிக்கிய சம்பவம் குறித்து மவுனம் கலைத்த நிதி அகர்வால்
நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக வந்ததை பற்றி பரவிய விமர்சனத்திற்கு நடிகை நிதி அகர்வால் பதில் கொடுத்து இருக்கிறார்.;
ஐதராபாத்,
ஆந்திராவைச் சேர்ந்த நிதி அகர்வால், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சிம்பு ஜோடியாக ‘ஈஸ்வரன்' படத்தில் அறிமுகம் ஆன இவர், ரவிமோகன் ஜோடியாக ‘பூமி', உதயநிதியுடன் ‘கலகத்தலைவன்' போன்ற படங்களில் நடித்தார். பவன் கல்யாணுடன் ‘ஹரி ஹர வீர மல்லு' படத்தில் நடித்த இவர், தற்போது பிரபாஸ் ஜோடியாக ‘தி ராஜா சாப்' படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கான பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்த படத்தின் இரண்டாது பாடல் வெளியீடு நிகழ்ச்சி, ஐதராபாத்தில் உள்ள பெரிய மாலில் நடைபெற்றது.
இந்த விழாவில் நிதி அகர்வால், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு நடிகை வெளியே வரும்போது கூட்டத்திற்கு நடுவில் சிக்கிக்கொண்டார். அதில் சிலர் நடிகையிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தெலுங்கு நடிகர் சிவாஜி ‘பெண்கள் கண்டபடி உடை அணிந்தால் பிரச்சினை தான். உடலை முழுவதும் மூடும் சேலையில் தான் அழகு உள்ளது. அங்கங்கள் தெரியும்படியான உடைகளில் அழகு தெரியாது' என பெண்கள் ஆடை அணிவது குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவாஜியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக வந்ததை பற்றி பரவிய விமர்சனத்திற்கு நடிகை நிதி அகர்வால் பதில் கொடுத்து இருக்கிறார். அதாவது, "பாதிக்கப்பட்டவரையே குறை கூறுவது, பிரச்சினையை திசை திருப்புவதாகும்.." என அவர் கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.