"சிறிய படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க போராட வேண்டியுள்ளது" - சமுத்திரக்கனி

தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார்

Update: 2024-04-27 12:58 GMT

சென்னை,

நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சுப்பிரமணியபுரம், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இவர் அப்பா, தலைக்கூத்தல், ஆண் தேவதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது.சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள 'ராமம் ராகவம்' பட டீஸர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் சமுத்திரக்கனி கூறியதாவது ,

அப்பா என்றாலே எனக்குள் ஒரு வேதியியல் மாற்றம் நடந்து விடும். அப்பாவாக இதுவரை பல கதைகளில் நடித்துள்ளேன். இந்தப் படத்திலும் அப்பாவாக நடித்துள்ளேன். ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரமும் வெவ்வேறு மாதிரி. ஒருமுறை கூட அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை. புரிந்துகொள்ளவே முடியாத பந்தம் அப்பா - மகன் உறவு தான். 'ராமம் ராகவம்' படம் மக்களிடம் போய் சேர வேண்டும்.படம் சிறப்பாக வந்துள்ளது.

ஒவ்வொரு முறையும், சிறிய படங்களை எடுத்துவிட்டு அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க போராட வேண்டியுள்ளது. 'அப்பா' என ஒரு படம் எடுத்தேன். இன்றுவரை அது என்ன ஆனது என்பது குறித்த கணக்கே எனக்கு வரவில்லை. இப்படித்தான் இன்றைய சூழல் உள்ளது.என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்