வண்ணத் தாரகை கே.பி.சுந்தராம்பாள்

1958-ம் ஆண்டில் காமராஜர் முதல்வராக இருந்தபோது, கே.பி.சுந்தராம்பாள் தமிழக மேல் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது.

Update: 2021-10-13 07:24 GMT
கே.பி.எஸ். என்று திரைப்பட ரசிகர்களால் அழைக்கப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் தமிழ் இசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பல துறைகளிலும் புகழ் பெற்றவர். ‘கொடுமுடி கோகிலம்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்ட அவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி என்ற ஊரில் பிறந்தார். அவரது அம்மா பாலாம்பாள். கே.பி.சுந்தராம்பாள் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். 

அவருடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். ‘கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி’யில் ஆரம்பப் பள்ளி படிப்பை முடித்தார்.

குரல் வளம், பாடும் திறன், நடிப்பு ஆகியவற்றில் சிறந்த கலைஞரான கே.பி.சுந்தராம்பாள் சிறுவயதில் அனுபவித்த துன்பங்களும், திருமண வாழ்வில் எதிர்கொண்ட ஏமாற்றங்களும் அதிகம். கலையின் மேல் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக, வைராக்கியத்துடன் செயல்பட்டு புகழின் உச்சத்தை அடைந்தார்.

புகழ்பெற்ற நாடகக் கலைஞர் எஸ்.ஜி.கிட்டப்பாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கே.பி.சுந்தராம்பாள். இருவரும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் நடித்து வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான பாடல்களை, அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினர். அந்நியர் எதிர்ப்புப் பாடலைப் புரிந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

1933-ம் ஆண்டு கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளைச் சேலை அணியத் தொடங்கினார்.

பாடல்கள் மூலம் மகாத்மா காந்தியின் பெருமையை பரப்பியவர்களில் கே.பி.சுந்தராம்பாள் முக்கியமானவர். 1937-ல் காந்தி ஈரோடு வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கொடு
முடியில் உள்ள கே.பி.எஸ். வீட்டில் உணவருந்தினார். காந்திக்கு தங்கத் தட்டில் உணவு பரிமாறினார் கே.பி.எஸ். “எனக்கு வெறும் சாப்பாடு மட்டும்தானா? இந்தத் தட்டு கிடையாதா?” என்று காந்தி சிரித்துக்கொண்டே கேட்டார். 

பின்னர், அந்தத் தங்கத்தட்டை காந்தியிடமே கே.பி.எஸ். அளித்தார். காந்தி அதை அப்போதே ஏலத்தில் விட்டு, பணத்தை காங்கிரஸ் நிதியில் சேர்த்தார்.

1935-ம் ஆண்டில் தயாரான பக்த நந்தனார் என்ற படத்துக்காக கே.பி.சுந்தராம்பாள் பெற்ற சம்பளம் ரூபாய் ஒரு லட்சம். இது அக்காலத்தில் மிகவும் ஆச்சரியமாக பேசப்பட்ட செய்தியாகும். அந்த தொகை இந்திய அளவில் யாருக்கும் தரப்படவில்லை. அது தனது தொழில் பக்திக்காக கிடைத்த பணம் என்று ஒருமுறை கே.பி.சுந்தராம்பாள் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.

1958-ம் ஆண்டில் காமராஜர் முதல்வராக இருந்தபோது, கே.பி.சுந்தராம்பாள் தமிழக மேல் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது. தருமபுரம் ஆதினம் ‘ஏழிசை வல்லபி’ என்ற பட்டத்தை வழங்கியது.

1980-ம் ஆண்டு கே.பி.சுந்தராம்பாள், சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர். அவரின் உடல் அழிந்தாலும், அவர் ஆற்றிய தொண்டும், சேவையும் அவரை மக்கள் மனதில் உயிர்த்திருக்கச் செய்யும். 

மேலும் செய்திகள்