திறமையே நமக்கான அடையாளத்தை உருவாக்கும் - ரித்திகா

வயலின் இசையை என்னுடைய தனி அடையாளமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எண்ணியபோது பலரும், பக்கவாத்தியத்திற்கான மதிப்பு குறைவு என்று எதிர்மறையான கருத்துக்களை கூறினர். ஆனால், நம் திறமையின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையும், ஆர்வமுமே நமக்கான அடையாளத்தை உருவாக்கித் தரும் என்று நம்பினேன்.

Update: 2023-09-24 01:30 GMT

ரதம், பாடல், வயலின் என பன்முக கலைத் திறமைகள் கொண்டவராக விளங்கும் ரித்திகா, 'நம் திறமைகள் மீது ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தால் நமக்கான அடையாளம் தானாக உருவாகும்' என்கிறார். அவரிடம் பேசியபோது...

"எனது பூர்வீகம் கும்பகோணம் என்றாலும் பிறந்து, வளர்ந்ததெல்லாம் திருச்சியில் தான். சிறு வயதில் இருந்தே இசையின் மீது இருந்த ஆர்வத்தால் பாட்டு பாட கற்றுக் கொண்டேன். பாட்டினைத் தொடர்ந்து, பரதம், வயலின் ஆகிய கலைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. எனவே அவற்றையும் கற்றுத் தேர்ந்தேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பாட்டு, பரதம், வயலின் ஆகியவற்றில் அரங்கேற்றம் செய்துவிட்டேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ வயலின் கற்றுக் கொண்டேன். தற்போது கர்நாடக இசை கற்று வருகிறேன்.

இசையைப் போலவே கல்வியின் மீதான ஆர்வமும் எனக்குக் குறையவில்லை. சிறுவயதில் இருந்தே குடிமைப் பணி தேர்வு (Civil services) எழுத வேண்டும் என்பதே எனது லட்சியமாக இருந்து வந்தது. பள்ளி, கல்லூரிகளிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவியாகவே இருந்து வந்தேன். அதன் பின்னர் திருச்சியில் தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றேன். எனினும் இசையின் மீது இருந்த ஆர்வத்தால் இசையை வாழ்க்கையின் பயணமாக மாற்ற வேண்டும் என்று எண்ணி பொறியியல் பட்டப்படிப்பிற்குப் பிறகு வயலின் இசையில் இளங்கலைப் பட்டமும் பெற்றேன்.

பல்வேறு நிகழ்ச்சிகளிலும், கோவில் விழாக்களிலும் பாடுவதற்கும், வயலின் இசை வாசிப்பதற்கும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. அவற்றை பயன்படுத்தி என்னுடைய பாட்டுத் திறமையை மெருகேற்றி எனக்கான வாய்ப்புகளை நானே பெற்றுக் கொண்டேன். திறமைக்கான அங்கீகாரமாக தற்போது தொடர்ந்து பல கோவில்களில் வயலின் வாசித்து வருகிறேன்.

வயலின் இசையை என்னுடைய தனி அடையாளமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எண்ணியபோது பலரும், பக்கவாத்தியத்திற்கான மதிப்பு குறைவு என்று எதிர்மறையான கருத்துக்களை கூறினர். ஆனால், நம் திறமையின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையும், ஆர்வமுமே நமக்கான அடையாளத்தை உருவாக்கித் தரும் என்று நம்பினேன். அதுதான் என்னை இன்று இசை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்கும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. இது தவிர, சிறந்த இளம் சாதனையாளர் விருதையும் பெற்றுத் தந்துள்ளது.

நம் திறமைகளை இந்த உலகிற்கு வெளிக்காட்ட கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் எனது இசைத் திறமையை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்தேன். அதன்மூலம் கிடைத்த வாய்ப்புகள் என்னை முன்னேற்ற பாதையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

நம்முடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்கு எளிய வழி நாம் கற்றுக் கொண்டதை பிறருக்கு கற்பிப்பதுதான் என்பதன் அடிப்படையில், வயலின் இசையை பல மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன். நேரடியாக பயிற்சி பெறுபவர்களை விட இணையதளம் மூலம் பயிற்சி அளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. கனடா, மலேசியா ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் என்னிடம் இணையம் வழியாக வயலின் இசையை கற்று வருகின்றனர்.

இசையை எல்லோருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் நோக்கம். ஆகையால் அருகில் உள்ள ஆதரவற்ற இல்லம் மற்றும் காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன்.

கல்லூரி, நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பல மேடைகளை அலங்கரித்ததால் பல்வேறு மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது என்னை நானே மேம்படுத்திக்கொள்ள உதவியாக இருந்தது. என் தந்தையின் தொழில் நிறுவனங்களையும் தற்போது நானே கவனித்து வருகிறேன்.

நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே என் பெற்றோர் எனக்கு அளித்த ஊக்கமும், ஆதரவுமே ஒரே நேரத்தில் பலவற்றை கற்றுக்கொள்வதற்கு எனக்கு உதவியாக இருந்தது.

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் தனித் திறமைகள் மீது நம்பிக்கை வைத்து அதில் பயணிக்க உதவிட வேண்டும். கல்வி, இசை, விளையாட்டு என எந்த துறையானாலும் அவர்களுக்குப் பிடித்த துறையில் பயணிக்கும்போது அதில் அவர்கள் வெற்றி பெறுவது எளிது.

சிறு வயதில் என்னுடன் பயின்ற சக மாணவர்கள் பொழுதுபோக்கிற்காக நேரத்தை ஒதுக்கியபோது, நான் என் தனித் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு பயன்படுத்திக் கொண்டேன். அதன் பயனாக இன்றைக்கு எனக்கு பல வெற்றிகளும், அங்கீகாரமும் கிடைத்து வருகிறது.

தொழில் முனைவோர், இசைக்கலைஞர், பரதநாட்டிய கலைஞர், தொகுப்பாளர் என அனைத்து துறையிலும் தனித்துவத்தோடு சாதிக்க வேண்டும். அதற்கான முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறேன். வருங்காலத்தில் சிறந்த வயலின் இசை கலைஞராக உருவாக வேண்டும் என்பதே எனது லட்சியம்'' என்கிறார் ரித்திகா.

Tags:    

மேலும் செய்திகள்