பேச்சுத் திறமையால் மனங்களை கவரும் ஸ்ரீநிதி ஆழ்வார்

திருக்குறள் ஒப்புவிப்பது, தமிழ் இலக்கணங்கள் கற்பது ஆகியவற்றில் ஸ்ரீநிதிக்கு விருப்பம் அதிகம். எந்தவித தயக்கமும் இல்லாமல் மற்றவர்கள் முன் இவர் பேசுவதைக் கவனித்த பெற்றோர் சிறிது சிறிதாக பயிற்சி கொடுக்க ஆரம்பித்தனர். இதற்கு ஸ்ரீநிதி ஆர்வத்துடன் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்.

Update: 2021-10-18 11:35 GMT
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆழ்வார் பாபூஜி-பவித்ராவின் இரண்டாவது மகள் ஸ்ரீநிதி ஆழ்வார். இவர் தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறார். சிறு வயது முதல் மேடைப்பேச்சின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஸ்ரீநிதி, இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட மேடைகளில் உரையாற்றி இருக்கிறார். தமிழ் மீது பற்றுகொண்ட இவர் தமிழ் சார்ந்த பல்வேறு மேடைகளில் பேசி வருகிறார்.  

உலக அளவில் நடைபெறும் பட்டிமன்றங்கள் மற்றும் மேடைப் பேச்சுகளில் பங்கேற்று இருக்கும் ஸ்ரீநிதி, 108 உலக தமிழ் இலக்கிய அமைப்புகள் பங்கேற்ற 1140 மணி நேர முத்தமிழ் கலை, பண்பாட்டு உலக சாதனை நிகழ்ச்சியில் ‘ஔவையார்’, ‘அமுதே தமிழே அழகிய மொழியே’, ‘முத்தமிழ் போற்றும் முருகன் பாமாலை’ என மூன்று தலைப்புகளில் உரையாற்றி இருக்கிறார். இதன் மூலம் ‘ஆரஞ்ச் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சான்றிதழ் பெற்றிருக்கிறார். 

‘செந்தமிழும் நா பழக்கம்’ என்பதற்கு ஏற்றவாறு, பல்வேறு மேடைகள் கண்ட அந்த மழலைக் குரல், ஆற்றும் ஒவ்வொரு உரையும் கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது.

சிறுவயது முதல் பேசுவதில் அதிக ஈடுபாடு உடைய ஸ்ரீநிதி, கார்ட்டூன் சேனல்களைக் காட்டிலும் தமிழ் மேடைப்பேச்சு வீடியோக்கள் பார்ப்பது, அதில் பேசுபவர்களைப் போல பேசிக் காட்டுவது போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். 

திருக்குறள் ஒப்புவிப்பது, தமிழ் இலக்கணங்கள் கற்பது ஆகியவற்றில் ஸ்ரீநிதிக்கு விருப்பம் அதிகம். எந்தவித தயக்கமும் இல்லாமல் மற்றவர்கள் முன் இவர் பேசுவதைக் கவனித்த பெற்றோர் சிறிது சிறிதாக பயிற்சி கொடுக்க ஆரம்பித்தனர். இதற்கு ஸ்ரீநிதி ஆர்வத்துடன் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்.



முதன் முதலாக அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் ‘ஆண்டாள் சரித்திரம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஒரே நாளில் ஏறத்தாழ 11 லட்சத்திற்கும் மேலானோர் அதைப் பார்த்திருந்தார்கள். 

முகநூல் பக்கத்திலும் ஸ்ரீநிதியின் வீடியோ விரைவாக பரவியது. பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ரசிகர்கள் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். ஸ்ரீநிதியின் பேச்சை ரசித்த பிருந்தா கோவிந்தன் என்பவரின் முயற்சியால், டெல்லி கலை இலக்கிய அமைப்பில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு உலக அளவில் பல்வேறு இடங்களில் ஸ்ரீநிதி பேசி வருகிறார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மேடைப்பேச்சு நிகழ்ச்சிகளும் இணைய வழியாகவே நடக்கின்றன. அதன் மூலம் உலகளாவிய மேடைப் பேச்சுகளிலும் ஸ்ரீநிதி பங்கேற்று வருகிறார்.

ஸ்ரீநிதிக்கு அவரது பாட்டி தான் முதல் குரு. அதற்கடுத்து அவரது அம்மா, ஸ்ரீநிதி பங்கேற்கும் அனைத்து மேடைப் பேச்சுகளுக்கும் அவரை தயார்படுத்துவார். அவரது அண்ணன் ஸ்ரீதேஜா யூடியூப் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். தங்கையின் வளர்ச்சியின் மேல் மிகுந்த ஆர்வம் உடையவர். ஸ்ரீநிதி படிக்கும் பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் என அனைவரும் அவரை ஊக்குவித்து வருகின்றனர்.



பேச்சால் அனைவரையும் கவரும் ஸ்ரீநிதியிடம் பேசியபோது..

“எனது மானசீக குரு விசாகா ஹரி. மேடையில் பேசுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனக்கு பேசக் கற்றுக் கொடுப்பது, முக பாவனைகள் சொல்லித் தருவது எல்லாம் எனது அம்மாவும், அப்பாவும் தான். என் அண்ணன் ஸ்ரீதேஜா தினமும் நான் பேசிய வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து கொடுக்கிறார்” என்றார்.

சிறுவயது முதலே தமிழ் மீதும், மேடைப் பேச்சின் மீதும் பற்று கொண்ட ஸ்ரீநிதிக்கு சிறந்த பேச்சாளராக வேண்டும் என்பதே கனவு. சரியான வழிகாட்டுதலும், உறுதுணையும் இருந்தால் எந்தக் குழந்தையும் அதன் கனவை நோக்கி எளிதாகப் பயணிக்கும். அந்த வகையில் ஸ்ரீநிதியின் ஆசை மற்றும் கனவுகளுக்குப் பின்னால் அவரது குடும்பத்தினர் பக்க பலமாக இருக்கின்றனர். 

மேலும் செய்திகள்