ஸ்கேட்டிங், ஜிம்னாஸ்டிக் இரண்டிலும் கலக்கும் சோனாக்‌ஷி

பயிற்சியைத் தொடங்கிய ஆறே மாதங்களில் மாநில அளவில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டியிலும் சோனாக்‌ஷி தங்கம் வென்றார்.

Update: 2021-12-20 05:30 GMT
திருச்சியைச் சேர்ந்த சுதர்ஷன்-சங்கரி தம்பதியின் மூத்த மகள், ஆறு வயதான சோனாக்‌ஷி. இவர் ஸ்கேட்டிங் பயிற்சியைத் தொடங்கிய ஒரே ஆண்டில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இரண்டரை வயது முதலே ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்று வந்த சோனாக்‌ஷி, மாநில அளவில் இரண்டு முறை தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். முறையாக பரத நாட்டியமும் கற்று வருகிறார். சோனாக்‌ஷியின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்குத் துணை நின்றவர் அவரது தாத்தா மணிவேல்.

சோனாக்‌ஷியின் பாட்டி தனலட்சுமி த்ரோபால் விளையாட்டு வீராங்கனையாக இருந்தவர். இவர் சோனாக்‌ஷிக்கு உடற்பயிற்சிகளையும், யோகாவையும் சொல்லிக்கொடுத்து வந்தார். இந்தப் பயிற்சிகளை மேற்கொண்டதன் காரணமாக, சோனாக்‌ஷியின் உடல் நன்றாக வளையும் தன்மை பெற்றது. அதன்பிறகு இரண்டரை வயதில் சோனாக்‌ஷியை ஜிம்னாஸ்டிக் வகுப்பில் சேர்த்தனர்.

ஆண்டனி என்பவரிடம் ஆர்வத்தோடு பயிற்சி பெற்ற சோனாக்‌ஷி, தான் பங்கேற்ற முதல் - மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 2019-ம் ஆண்டு மாவட்ட அளவில் நடைபெற்ற மூன்று வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியிலும், நான்கு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும் தங்கப் பதக்கங்களைப் பெற்றார். பயிற்சியைத் தொடங்கிய ஆறே மாதங்களில் மாநில அளவில் நடைபெற்ற போட்டியிலும் சோனாக்‌ஷி தங்கம்  வென்றார்.

2020-ம் ஆண்டு தங்கள் தெருவில் வசிக்கும் பிள்ளைகள் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு இருந்ததைக் கண்ட சோனாக்‌ஷி தானும் அதைக் கற்க விரும்பினார். அப்போது முதலே தனது ஐந்தாவது வயதில் இருந்து பூஞ்சோலை - மகேஸ்வரி தம்பதியிடம் ஸ்கேட்டிங் பயிற்சி பெறத் தொடங்கினார்.

இந்த வருடம் ஆகஸ்டு மாதத்தில்  நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், ஒரு பிரிவின் கீழ் வெள்ளிப் பதக்கமும், மற்றொரு 
பிரிவின் கீழ் தங்கப் பதக்கமும் வென்றார். அதன்பிறகு மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், ஆறு வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். சோனாக்‌ஷிக்கு எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே லட்சியம்.  

சோனாக்‌ஷியின் தாய் பரதநாட்டியப் பள்ளி நடத்தி வருகிறார். அங்கே தினமும் சென்று வந்த சோனாக்‌ஷி, மற்றவர்கள் ஆடுவதைப் பார்த்து, வெகு சீக்கிரமே தானும் ஆடத் தொடங்கினார். பரதநாட்டியத்தில் தொடர்ந்து பயிற்சி பெற்று பல மேடைகளில் நடனம் ஆடி வருகிறார். பரதநாட்டியத்திலும் பெரிய அளவில் சாதிக்க வேண்டுமென்பது சோனாக்‌ஷியின் ஆசையாகும். 

மேலும் செய்திகள்