ஆட்டோவில் பயணித்த அதிகாரி

மூன்று சக்கர வாகனமான ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்வது, மற்ற போக்குவரத்து வழிகளுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைந்த கார்பன் தடம் கொண்டதாக இருந்ததால் அதையே பின்பற்றினார்.

Update: 2021-12-27 05:30 GMT
ந்தியாவிற்கான மெக்சிகோ நாட்டின் தூதுவராக செயல்பட்டவர் மெல்பா ப்ரியா. சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் சமூகத்தின் வளர்ச்சி ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் பெற்றவர். இவர் மெக்சிகோ அரசாங்கத்தின் சர்வதேச உறவுகளை மெருகேற்றுவதில் மற்றும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

மெல்பா, இந்தியாவில் பணியாற்றும்பொழுது தினமும் அலுவலகம் செல்வதற்கு ஆட்டோ ரிக்ஷாவை பயன்படுத்தினார். பலருக்கும் அது வியப்பை தந்தது. ‘சுற்றுச்சூழல் விழிப்புணர்வைப் பரப்புவது, இந்திய மக்களுடன் இணைவது போன்ற காரணங்களால் தான் பயணிப்பதற்கு  ஆட்டோ ரிக்ஷாவை பயன் படுத்துவதாக’ அப்போது கேட்டவர்களிடம் கூறினார் மெல்பா.

இவர், மெக்சிகோ தூதுவராக இந்தியாவில் பணியாற்றியபோது டெல்லியில் வசித்தார். மாசு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லியும் இருந்ததால், அங்கு காற்றின் தரம் குறித்து கவலை அடைந்தார். வாகனங்களால் தான் பெரும்பாலும் மாசு ஏற்படுகிறது என்பதை அறிந்தார். 

மூன்று சக்கர வாகனமான ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்வது, மற்ற போக்குவரத்து வழிகளுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைந்த கார்பன் தடம் கொண்டதாக இருந்ததால் அதையே பின்பற்றினார்.

மெல்பாவின் ஆட்டோ பயணம் டெல்லி மக்களிடம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்றது. அவரின் பாதுகாப்பு குறித்து பயப்பட்ட அனைவரிடமும் ‘‘மெக்சிகோவில் மாசுபாடு உச்சத்தில் இருந்த பொழுது அங்கு வசித்தேன். சில சட்டங்கள் மற்றும் வழிமுறைகளால் மெக்சிகோவில் மாசுபாடு கட்டுக்குள் அடங்கியது. 

அதுபோலவே, டெல்லியின் சுற்றுச்சூழல் மாசுபாடு கட்டுக்குள் வருவதற்காக என்னுடைய பங்காக நான் ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கிறேன் அவ்வாறு செய்வது எனக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானதே’’ என்று கூறினார்.

மற்ற சமூக சேவைகள்:
மெல்பா, ஒரு தடகள வீரர். அதனால் ஓடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தி நிதி திரட்டுவதற்காக மாரத்தான்களை நடத்தினார். 

மெக்சிகோ தேசிய தினத்தை ஒருங்கிணைத்து அவர் நடத்திய அரை மாரத்தான் மற்றும் தொண்டு ஓட்டத்தின் மூலம் திரட்டப்பட்ட பணம் அனைத்தும் புற்றுநோயாளிகளுக்கான நோய்த்தடுப்பு சிகிச்சைக்காக வழங்கப்பட்டது.

மெல்பா, தனது தொழில்முறை பொறுப்புகளை திறமையுடன் நிறைவேற்றுவதில் மிகுந்த அனுபவம் பெற்றவர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தன் பொறுப்பினை உணர்ந்து, தனது சிறிய பங்காக ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 
‘உங்களால் முடியும் என்று நம்புங்கள்; உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதையே தொடர்ந்து செய்யுங்கள்’ இதுவே தனது வாழ்க்கையின் தாரக மந்திரமாக மெல்பா கூறுகிறார். 

சுற்றுச்சூழலை காப்பதற்கு நம்மால் முடிந்த சிறிய மாற்றம், பெரிய அளவில் பயன் தரும் என்பதை மெல்பாவின் செயல் மூலம் உணரலாம். 

மேலும் செய்திகள்