அறிவியல் தினத்தில் ஒரு உலக சாதனை

அம்மாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக சாதனை செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ஆராய்ந்தேன். அப்போது ‘ராமன் விளைவு’ என்ற அறிவியல் நிகழ்வுக்காக, அறிவியல் அறிஞர் சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு வாங்கிய தினத்தை ‘தேசிய அறிவியல் தினமாக’ கொண்டாடுவதை படித்து தெரிந்துகொண்டேன்.

Update: 2022-04-04 05:30 GMT
டலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் ஜோதிகா. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு 50X80 அடி நீள அகலத்தில் அறிவியல் சூத்திரங்களை எழுதி, அதன் மூலம் அறிவியல் அறிஞர் சி.வி.ராமனின் உருவப்படத்தை உருவாக்கி புதிய உலக சாதனைப் படைத்துள்ளார். தனது சாதனையைப் பற்றி அவரே விளக்குகிறார்.

“என் பெற்றோர் பிரபு-சுமதி. நான் பிறந்தது சிதம்பரத்தில். தற்போது புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன்.

எனது சிறுவயதிலேயே அப்பா இறந்து விட்டார். கல்வியறிவு இல்லாத அம்மா அக்கம் பக்கத்துக்கு வீடுகளிலும், உணவகங்களிலும் வேலை செய்து மிகுந்த சிரமத்துக்கு இடையில் என்னைப் படிக்க வைத்தார். தற்போது நாங்கள் கடலூரில் வசிக்கிறோம்.

நான் படித்த பள்ளியில் எனது வகுப்பாசிரியையும், தமிழாசிரியையும் என்னை எப்போதும் ஊக்குவித்தனர். ‘ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ அதைக் கடந்து போகப் பழகு. அந்த அனுபவத்தை ருசித்து பார். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்’ என்று அவர்கள் கூறிய வார்த்தைதான் பேச்சுப்போட்டி, நடனப்போட்டி என பல போட்டிகளில் என்னை கலந்து கொள்ளத் தூண்டியது. எனது நண்பர்கள் ஒவ்வொருவரும் ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருந்தனர்.

அம்மாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக சாதனை செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ஆராய்ந்தேன். அப்போது ‘ராமன் விளைவு’ என்ற அறிவியல் நிகழ்வுக்காக, அறிவியல் அறிஞர் சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு வாங்கிய தினத்தை ‘தேசிய அறிவியல் தினமாக’ கொண்டாடுவதை படித்து தெரிந்துகொண்டேன். அதை முன்வைத்து இந்த ஆண்டு அறிவியல் தினத்தில் 50X80 அடி நீள அகலத்தில் சர்.சி.வி.ராமனின் உருவப் படத்தை வரைந்து அதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் சூத்திரங்களை எழுதினேன். இதற்கு விழிகள் அமைப்பைச் சேர்ந்த பிரேம் மற்றும் பிரகதீஷ் ஆகியோர் எனக்கு உதவியாக இருந்தனர். தொடர்ந்து 18 மணி நேரம் உழைத்து இந்த சாதனையை நிகழ்த்தினேன். கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து விருது பெற்றேன். என்னுடைய நண்பர்கள் கடைசி நிமிடம் வரை என்னை ஊக்குவித்து, கூடவே இருந்து உதவி புரிந்தனர்.

இந்த விருதை என்னுடைய அம்மாவுக்கும், ஆசிரியைகளுக்கும், எனது நண்பர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

எதிர்காலத்தில், என் அம்மாவைப் போல சிரமப்படும் பெண்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். என்னைச் சுற்றியுள்ளவர்கள் பசியால் வாடாமல்  பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவே எனது லட்சியம்.

மகனுக்கு கொடுக்கும் ஊக்கத்தையும், தைரியத்தையும், சுதந்திரத்தையும் மகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று அனைத்து பெற்றோரையும் கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் செய்திகள்