அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகத்தை அசத்தி வரும் இளம்பெண்

16 வயது கீதாஞ்சலி, தனது சிறு வயதிலேயே அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் கலந்து ஒரு புதிய கண்டுபிடிப்பை உலகிற்கு கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். ஒரு நாள் குடிக்கும் தண்ணீரில் ‘லெட்’ என்ற கலவை அதிகமாக இருப்பதை உணர்ந்தார்.

Update: 2022-05-02 05:30 GMT
ளம் வயதில் துடிப்பும், ஆர்வமும், திறமையும் இருப்பதால் இளமையிலேயே நிறைய சாதிக்க வேண்டும் என்று பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். அதனை தனது ஆராய்ச்சி திறமையாலும், உலகத்தில் தன்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையாலும் நிரூபித்து காட்டி இருக்கிறார், அமெரிக்காவில் வசிக்கும் இளம்பெண் கீதாஞ்சலி ராவ்.

16 வயது கீதாஞ்சலி, தனது சிறு வயதிலேயே அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் கலந்து ஒரு புதிய கண்டுபிடிப்பை உலகிற்கு கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். ஒரு நாள் குடிக்கும் தண்ணீரில் ‘லெட்’ என்ற கலவை அதிகமாக இருப்பதை உணர்ந்தார். 

அதனால், ‘டெதிஸ்’ என்ற கருவியை உருவாக்கினார். இந்தக் கருவி, குடிக்கும் தண்ணீரில் ‘லெட்’ கலவை எவ்வளவு கலந்திருக்கிறது என்று கணக்கு எடுத்து, ஸ்மார்ட் போன் செயலியில் தகவல் அனுப்பும். இந்த எதேச்சையான கண்டுபிடிப்பால் 2017-ம் ஆண்டு ‘டிஸ்கவரி கல்வி 3எம்  இளம் விஞ்ஞானி சவால்’ என்ற போட்டியில், ‘அமெரிக்காவின் சிறந்த இளம் கண்டுபிடிப்பாளர்’ என்ற பட்டத்தை வென்றார் கீதாஞ்சலி.

மேலும், கைன்ட்லி (Kindly) என்ற செயலியை உருவாக்கினார். இது இணைய மிரட்டலை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தடுப்பதற்கு உதவுகிறது. கீதாஞ்சலியின் முக்கியமான கண்டுபிடிப்பு, கொலராடோ பல்கலைக்கழகத்தில் கண்டுபிடித்த ‘எபியோன்’ என்ற சாதனம்தான். இது மனிதர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது. ‘ஓபியாய்டு’ என்ற மருந்து மனிதர்களுக்கு வலி நிவாரணியாக  பயன்படுகிறது. அதைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது போதை போல அடிமையாக்குகிறது. ‘எபியோன்’ சாதனத்தை பயன்படுத்தி, போதை பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்களா? இல்லையா? என்பதை தீர்மானிக்க முடியும்.

கீதாஞ்சலி வாரந்தோறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதுவரைக்கும் உலகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தனது அறிவியல் கண்டுபிடிப்புகளின் நன்மைகள் மற்றும் செயல்களை எடுத்துரைத்திருக்கிறார். தனது கண்டுபிடிப்புக்காக ஜனாதிபதி விருதும், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக குளோரியா பேரோன் ‘இளம் ஹீரோ' என்ற பட்டமும் பெற்றார். அமெரிக்காவின் ‘டைம்’ இதழில் 2020-ம் ஆண்டு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். கிட்டத்தட்ட 5 ஆயிரம் திறமைசாலிகளில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அறிவியல் கண்டுபிடிப்பு தவிர, புத்தகம் எழுதுதல், ஓவியம் வரைதல், நடனம், இசை, பியானோ வாசிப்பது, சமைப்பது, நீச்சல் போன்றவற்றிலும் ஜொலித்து வருகிறார். தனது ஒன்பது வயதில் அவர் எழுதிய ‘பேபி பிரதர் ஒன்டர்ஸ்’ என்ற புத்தகத்திற்கு தேசிய அளவில் 2-வது இடம் கிடைத்தது. சர்வதேச விமான கலைப் போட்டியில் தனது ஓவியத்திற்கு முதலிடம் பெற்றார். 

மேலும் செய்திகள்