தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’

இன்று வரை 116 மரங்கள் நட்டு முடித்திருக்கிறேன். தினமும் இரவு நேரப் பணிக்குச் செல்கிறேன். உடல்நலக்குறைவுக்கு இடையில் மரம் நடுவது தினமும் சவாலாகத்தான் இருக்கிறது. என்னால் முடியாது என்று சோர்ந்து போகும் போதெல்லாம், எனது தம்பி மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறார்.

Update: 2022-05-09 05:30 GMT
த்யப்பிரியா, நெய்வேலியைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் ஐ.டி. துறையில் பணிபுரிகிறார். தினமும் ஒரு மரம் நட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். இதுவரை 116 மரக்கன்றுகளை நட்டுள்ளார். ஒரு வருடம் முழுவதுமாக இதை செயல்படுத்துவதே இவரது இப்போதைய இலக்காகும். தினம் ஒரு மரம் நடும் தனது அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

“எனது அப்பா செல்லபாண்டியன், அம்மா ராஜலட்சுமி இருவரும் உணவகம் நடத்தி வருகிறார்கள். எனக்கு ஒரு தம்பி இருக்கிறார். நெய்வேலியில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, கோயம்புத்தூரில் பி.எஸ்சி. ஏரோனாட்டிக்கல் சயின்ஸ் படித்தேன். படிப்பு முடிந்தவுடன் வேலைக்காகச் சென்னைக்கு வந்தேன். பணியாற்றிக்கொண்டே தற்போது எம்.பி.ஏ., படித்து வரு
கிறேன்.

நான் பிறந்து வளர்ந்த சுற்றுச்சூழல் எப்போதும் செடிகள், மரங்களோடு பசுமையாக இருக்கும். ஆனால் வேலைக்காக சென்னை வந்தபோது சூழல் வேறு மாதிரியாக இருந்தது. சில இடங்கள் மட்டுமே பசுமையாக உள்ளன. இயற்கை தொலைந்து போனதாகவே உணர்ந்தேன்.

மரங்கள் மட்டுமே பசுமையை உண்டாக்கும். எனவே ‘தினம் ஒரு மரம் நடலாமே’ என்று யோசித்தேன். அப்போதுதான் என்னுடன் தங்கி இருந்த தானலட்சுமி இதை சவாலாக எடுத்துக்கொண்டு செய்யும்படி உற்சாகப்படுத்தினார்.

எனக்கு உடல் நிலைக் குறைபாடு மற்றும் மூச்சுப் பிரச்சினை இருந்தது. ‘என்னாலும் முடியும்’ என்று சவாலோடு தான் ஆரம்பித்தேன். தானலட்சுமியும், எனது அம்மாவும் என்னை ஊக்குவித்தார்கள்.
சென்னையில் விலை மலிவான மரக்கன்றுகள் கிடைப்பது சிரமமாக இருந்தது. 

வருடம் முழுவதும் நடுவதற்கு மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதும் கடினமாக இருந்தது. நான் பணம் கொடுத்து, அம்மா அதைச் சேமித்து வைத்து, அப்பா நெய்வேலியில் இருந்து மரக்கன்றுகளை வாங்கிக் கொண்டு வந்து சென்னையில் கொடுக்கிறார். நான் தினமும் மரம் நடுகிறேன். இவ்வாறு எனது செயல்பாட்டில் என் குடும்ப உறுப்பினர்களது பங்கு அதிகமாக இருக்கிறது.

இன்று வரை 116 மரங்கள் நட்டு முடித்திருக்கிறேன். தினமும் இரவு நேரப் பணிக்குச் செல்கிறேன். உடல்நலக்குறைவுக்கு இடையில் மரம் நடுவது தினமும் சவாலாகத்தான் இருக்கிறது. என்னால் முடியாது என்று சோர்ந்து போகும் போதெல்லாம், எனது தம்பி மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறார்.

சிலர் வீட்டு வாசலில் மரம் நடுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். இடம் இருந்தும் அனுமதி மறுக்கப்படும் போது மிகவும் வருத்தமாக இருக்கும். நான் நட்ட மரங்களைப் பிடுங்கி எறிந்தவர்களும் இருக்கிறார்கள்.
தினமும் தண்ணீர் விடும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மரம் நட வேண்டும். அதனால் தண்ணீர் வரத்து உள்ள இடமாக தேடித்தேடி மரங்கள் நட்டு வருகிறேன்.

என் ஒருத்தியால் இவ்வளவு மரம் நடுவது சாத்தியமாகிறது என்றால், பத்து பேர் சேர்ந்து செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எதிர்காலத்தில் ஒரு குழு அமைத்து நிறைய மரங்கள் நட வேண்டும் என்று ஆசை. ஒரு வருடம் முழுவதும் இந்த சவாலை முடித்த பிறகு, ஒரு நாளில் 10 மரங்கள் நட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன்” என்றார் பசுமைப்பெண் சத்யப்பிரியா. 

மேலும் செய்திகள்