கூடலூர் பகுதியில், எள் அறுவடை பணிகள் தீவிரம் - விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
கூடலூர் பகுதியில் எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
கூடலூர்,
கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான ஏகலூத்து, கல்உடைச்சான்பாறை, பெருமாள்கோவில்புலம், கழுதைமேடு, பளியன்குடி, புதுரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் விவசாயிகள் நிலக்கடலை, எள், தட்டைப்பயிறு, அவரை, மொச்சை உள்ளிட்ட பயிர்களை கடந்த பங்குனி மாதம் விதைத்தனர்.
குறிப்பாக எள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. எள் பயிர்கள் பூக்கள் விட தொடங்கியதும் விவசாயிகள் களை எடுத்தும், மருந்துகள் தெளித்தும் பயிரை நன்கு பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கூடலூர் பகுதிகளில் எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளை டிராக்டர் வண்டிகள் மூலம் களத்துமேட்டு பகுதிகளுக்கு கொண்டுவந்து வெயிலில் உலர்த்தி வருகின்றனர். பின் செடிகளில் இருந்து எள்ளை தனியாக பிரித்து எடுத்து சுத்தம் செய்து விற்பனை செய்கின்றனர். 100 கிலோ எடை கொண்ட எள் மூட்டை (குவிண்டால்) ரூ.14 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்து 500 வரை விற்பனை ஆகிறது.
கடந்த ஆண்டு எள் மூட்டை ரூ.10 ஆயிரம் வரை விற்பனை ஆனது. தற்போது எள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் எள் மகசூல் குறைந்தளவே உள்ளது.