வாய்க்கால் தண்ணீர் ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டதால், 10 கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லை
போடி அருகே வாய்க்கால் தண்ணீர் ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டதால் 10 கண்மாய்களுக்கு நீர்வரத்து இன்றி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.;
தேனி,
தேனி மாவட்டம், போடி அருகே துரைராஜபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் கொட்டக்குடி ஆற்றில் இருந்து ஒரு பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் நீர்வரத்து ஏற்படும் போது இந்த வாய்க்காலில் தண்ணீர் வரத்து ஏற்படும். இந்த வாய்க்கால் துரைராஜபுரத்துக்கு வந்ததும், பிரதான மற்றும் இரட்டை வாய்க்கால் என தனித்தனியாக பிரிகிறது. இரட்டை வாய்க்காலுக்கு மதகுகள் அமைக்கப்பட்டு உள்ளன. பிரதான வாய்க்காலில் சிறு தடுப்பணை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரதான வாய்க்கால் மூலம் பொட்டல்களம், காமராஜபுரம், பண்ணைத்தோப்பு, சரளிக்குளம் போன்ற பகுதிகளில் உள்ள கண்மாய்கள், இரட்டை வாய்க்கால்கள் மூலம் ஒத்தவீடு, கோடாங்கிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்கள் என மொத்தம் 10 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும்.
அதிகப்படியான தண்ணீர் வரும் போது, கொட்டக்குடி ஆற்றுக்கு திருப்பி விடுவதற்காக இரட்டை வாய்க்கால் மதகு அருகில் தனியாக ஒரு மதகு அமைந்துள்ளது. இந்த மதகில் திறக்கப்படும் தண்ணீர் மீண்டும் கொட்டக்குடி ஆற்றில் கலக்கும்.
இந்நிலையில், இந்த பிரதான வாய்க்கால் தூர்வாரும் பணி கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது. இதனால், வாய்க்காலில் தண்ணீர் வராத வகையில் கொட்டக்குடி ஆற்றுக்குள் திருப்பி விடும் மதகு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக போடி மலைப்பகுதிகளில் மழைப் பொழிவு ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஆனால் பிரதான வாய்க்கால் மற்றும் இரட்டை வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத வகையில் வாய்க்காலில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் இந்த வாய்க்காலை நம்பியுள்ள 10 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘கொட்டக்குடி ஆற்றில் பலத்த மழை பெய்யும் போது வெள்ளப் பெருக்கு ஏற்படும். இவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் வாய்க்கால் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கண்மாய்களை நிரப்புவது வழக்கம்.
ஆனால், தற்போது கண்மாய்களுக்கு தண்ணீர் வராத வகையில், ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் கண்மாய்களை நம்பி உள்ள விவசாயிகள் ஏமாற்றத்துடன் உள்ளனர். எனவே, ஆற்றுக்கு திருப்பிவிடப்பட்ட தண்ணீரை கண்மாய்க்கு வருவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றில் நீர்வரத்து குறைந்து விட்டால், அதன் மூலம் பயன்பெற முடியாத நிலைமை ஏற்படும்’ என்றனர்.