மது விற்ற மூதாட்டி உள்பட 10 பேர் கைது, 81 பாட்டில்கள் பறிமுதல்
மாவட்ட பகுதிகளில் மதுபானம் விற்ற மூதாட்டி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 81 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.;
உப்புக்கோட்டை,
பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாழிசைசெல்வன் மற்றும் போலீசார் பூதிபுரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சரவணன் (வயது29), தினேஷ்குமார் (22) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல், வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் உப்புக்கோட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் உப்புக்கோட்டை காமராஜபுரம்-பத்ரகாளிபுரம் சாலையை சேர்ந்த காளிதாஸ் (55), காமராஜபுரம் ரைஸ்மில் தெருவை சேர்ந்த அமராவதி (60) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, அன்னஞ்சி விலக்கு ஆகிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதிகளில் சந்தேகப்படும்படி நின்ற 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், கூடலூரை சேர்ந்த பிரேம்குமார் (27), உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி (47), அல்லிநகரத்தை சேர்ந்த ரெங்கராஜ் (61), சொக்கதேவன்பட்டியை சேர்ந்த முருகன் (47) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார் தேனி உழவர் சந்தை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மதுபானம் விற்ற அல்லிநகரத்தை சேர்ந்த செல்வி (48), ஆனந்தன் (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான 10 பேரிடம் இருந்தும் 81 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.