அ.தி.மு.க. அலுவலகம் யாருக்கு சொந்தம்? ஆர்.டி.ஓ.விடம் ஆவணங்கள் தாக்கல்

அ.தி.மு.க. அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த ஆவணங்கள் ஆர்.டி.ஓ.விடம் தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2019-08-13 22:30 GMT
பெரியகுளம்,

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி ஆர்.எம்.டி.சி. காலனியில் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்த 2015-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அலுவலகத்தை, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த அலுவலகத்துக்கான நிலம், ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் பெயரில் உள்ளது.

இந்தநிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. உடைந்து தினகரன் தலைமையில் அ.ம.மு.க. உருவானது. இதனையடுத்து கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சினை இருந்து வந்தது. இரு கட்சியினரும் அங்கு சென்று கூட்டம் எதுவும் நடத்தவில்லை. இதற்கிடையே அ.தி.மு.க. கட்சி அலுவலகம் தொடர்பான பேச்சுவார்த்தை பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. ஜெயப்பிரீத்தா தலைமை தாங்கினார். அ.தி.மு.க. தரப்பில் மாவட்ட செயலாளர் சையதுகான், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், நகர துணை செயலாளர் அப்துல்சமது உள்ளிட்ட நிர்வாகிகளும், அ.ம.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, பெரியகுளம் ஒன்றிய செயலாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற 2 கட்சியினரும் தங்களுக்கு தான் கட்சி அலுவலகம் சொந்தம் என்பதற்கான ஆவணங்களை தனித்தனியாக ஆர்.டி.ஓ. விடம் தாக்கல் செய்தனர். மேலும் கூடுதல் ஆவணங் களை தாக்கல் செய்ய தங்களுக்கு காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு ஆர்.டி.ஓ. ஒத்தி வைத்தார். அதன்பிறகு 2 கட்சியினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். அ.தி.மு.க. அலுவலகத்துக்கு உரிமை கொண்டாடி அ.தி.மு.க., அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு திரண்டு வந்த சம்பவம் பெரியகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்