விழுப்புரத்தில், குடிபோதையில் தகராறு தொழிலாளி அடித்துக்கொலை - வாலிபர் கைது

விழுப்புரத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-08-13 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் பெரியகாலனி ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் தேவராஜ் மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 42). இவர் விழுப்புரம் எம்.ஜி.சாலை மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று மாலை ஜி.ஆர்.பி. தெரு பகுதியில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தார். அதன் பின்னர் இவர் தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது குடிபோதையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இனியன் (25) என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த இனியன், அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து ஜெயப்பிரகாசை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஜெயப்பிரகாஷ் மயங்கி விழுந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் இனியன் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட ஜெயப்பிரகாசுக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்