‘எங்களுக்கு யாரும் ஆணையிட முடியாது’ - டிரம்ப் மிரட்டலுக்கு கியூபா அதிபர் பதிலடி
கடைசி சொட்டு இரத்தம் உள்ள வரை தாயகத்தைப் பாதுகாக்க கியூபா தயாராக உள்ளது என அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.;
ஹவானா,
கடந்த 3-ந்தேதி, அமெரிக்கா ராணுவத்துறையினர் வெனிசுலா நாட்டிற்குள் அதிரடியாக நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் கைது செய்து நாடு கடத்தினர். அவர்கள் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க சட்டப்படி அவர்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், வெனிசுலாவில் இருந்து இனி கியூபாவிற்கு எரிபொருள் வர்த்தகம் நடைபெறாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இனி வெனிசுலாவில் இருந்து எரிபொருளோ அல்லது பணமோ கியூபாவிற்கு செல்லாது. காலம் கடப்பதற்குள் அமெரிக்க அரசுடன் கியூபா ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
வெனிசுலாவின் நட்பு நாடாக விளங்கும் கியூபா, தனது எரிபொருள் தேவைக்காக வெனிசுலாவையே பெருமளவில் நம்பி இருக்கிறது. இந்த சூழலில், வெனிசுலாவின் எரிபொருளை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என அந்நாட்டின் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ள டெல்சி ரோட்ரிகுவெஸிடம் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், டிரம்ப்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கியூபா அதிபர் மிகுவெல் டயாஸ்-கானல் மெர்முடெஸ், ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“மனித உயிர்கள் உள்பட அனைத்தையும் வியாபாரமாக மாற்றுபவர்களுக்கு கியூபாவை நோக்கி விரல் நீட்ட எந்த தார்மீக அதிகாரமும் இல்லை. கியூபாவின் மக்கள் இறையாண்மையுடன் தங்களுக்கான அரசியல் மாதிரியை தேர்வு செய்வதை பொறுக்க முடியாமல் நமது நாட்டின் மீது வெறுப்பை கொட்டுகிறார்கள்.
கியூபாவின் பொருளாதார நெருக்கடிக்கு புரட்சியை குறை கூறுபவர்கள் தங்கள் நாக்கை அடக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அமெரிக்கா கடந்த 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த கழுத்தை நெரிக்கும் நடவடிக்கைகளின் பலனை இப்போது அனுபவித்து வருகிறது.
கியூபா ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது. கியூபா ஆக்கிரமிப்பு செய்யவில்லை, அது 66 ஆண்டுகளாக அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் கியூபா யாரையும் அச்சுறுத்துவதில்லை. கடைசி சொட்டு இரத்தம் உள்ள வரை தாயகத்தைப் பாதுகாக்க கியூபா தயாராக உள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.