திருமண வீட்டில் வெங்காயம் திருடிய முதியவர் சிக்கினார்

உடன்குடியில் திருமண வீட்டில் வெங்காயம் திருடிய முதியவர் சிக்கினார்.

Update: 2019-12-09 23:15 GMT
உடன்குடி, 

நமது சமையலில் சுவை கூட்டும் பொருளாக வெங்காயம் உள்ளது. வெங்காயம் சேர்க்காவிட்டால் கூட்டு, குழம்பு உள்ளிட்டவை சுவையே இல்லாமல் போய்விடும். இப்படி சமையலில் முக்கிய இடத்தை பிடித்த வெங்காயத்தின் விலை தற்போது உயர்ந்து கொண்டிருக்கிறது. வெங்காயத்தை உரிக்காமலேயே குடும்ப பெண்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துவிடும் வகையில் விலை உயர்வு உள்ளது.

மேலும் தொடர் மழையின் காரணமாக வரத்து குறைந்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அவற்றை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி வருவதுடன், மதிப்புமிக்க பொருளாகவும் கருதி பாதுகாத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருமண வீட்டில் முதியவர் ஒருவர் வெங்காயத்தை திருடிய சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அங்கு மதிய உணவுக்காக சமையல் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த திருமண வீட்டின் உறவினரான முதியவர் ஒருவர் சமையல் பணிகளை கண்காணிப்பது போன்று பார்வையிட்டார். பின்னர் அவர் துணிப்பையில் பல்லாரி, வெங்காயம் ஆகியவற்றை திருடி விட்டு, அங்கிருந்து நழுவ முயன்றார். இதை பார்த்த சமையல்காரர் இதுகுறித்து திருமண வீட்டாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த முதியவரிடம் துணிப்பையில் இருந்த பல்லாரி, வெங்காயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் முதியவர் அங்கிருந்து சென்று விட்டார்.

பல்லாரி, வெங்காயம் ஆகியவை விலையேற்றம் அடைந்துள்ளதால், அவற்றை முதியவர் திருடியதாக திருமணத்துக்கு வந்தவர்கள் பேசினார்கள். திருமண வீட்டில் வெங்காயம் திருடிய முதியவர் பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்