இயற்கை சான்றுகளால் வரையப்படும் ஓவியம் சிறப்பானது - அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

ஓவிய வகைகளில் இயற்கை சான்றுகளை கொண்டு வரையப்படும் பிரெஸ்கோ ஓவியம் சிறப்பானது என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.

Update: 2019-12-10 22:00 GMT
காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத்துறை சார்பில் வட்டாரக் கலை நவீனத்துடன் ஒன்றிணையும் மரபுகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழக நுண்கலைத்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் (பொறுப்பு) ராசாராம் வரவேற்றார். பல்கலைக்கழக கலைப்புல முதன்மையர் முருகன் வாழ்த்துரை வழங்கினார்.

ஜெர்மனி நாட்டின் கலாமித்ரா, செவ்வியல் இந்திய நடன பள்ளி பயிற்றுனர் கட்ஜா இன்கிரிட்ஸ் கடன்லி தொடக்க உரையாற்றினார். கருத்தரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பன்னாட்டு கருத்தரங்கிற்கு பேராளர்கள் வழங்கிய கட்டுரைகளின் தொகுப்பு நூலை வெளியிட்டு பேசியதாவது:- நுண்கலையானது சமுதாயத்தின் ஒரு அங்கமாக திகழ்ந்து வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் நடன கலை மையமாக திகழ்ந்து வருகிறது.

தமிழக கோவில்களில் நடன வடிவமைப்புகள் சிற்பமாக உள்ளது. இசை, நடனகலை சமுதாயத்தில் சிறப்பிடம் பெற்றதை இது உணர்த்துகிறது. ஓவிய வகைகளில் இயற்கை சான்றுகளை கொண்டு வரையப்படும் பிரெஸ்கோ ஓவியம் சிறப்பானதாகும். இசை, நடனம், ஓவியம் ஆகிய அனைத்து கலைகளும் சமுதாயத்தில் வழங்கப்பட்டு வந்தவையாகும்.

குடுமியான்மலை இசைக் கல்வெட்டு இசைக் கலை வளர்ச்சிக்கு சான்றாக உள்ளது. இசை, நடனம், ஓவியம் ஆகிய நுண்கலைகள் சமுதாயத்தின் உயர்நிலை மக்களுக்குரியது எனவும், பின்னாளில் அது பொதுமக்களுக்குரியது எனவும் காணப்பட்டது. பொதுமக்களின் கலையாக கூத்து உள்ளது. இசை, நடனம் முதலிய கலைகள் ஒழுங்குப்படுத்தப்பட்ட நிலையில் மிக சிறப்பிடத்தை பெறுகின்றது. இசை, நடனம் போன்ற கலைகள் பெரிய அளவில் மக்கள் அனைவரும் படிக்கும் நிலை உருவாக வேண்டும். நுண்கலைகள் திறமை உள்ள ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.

அதற்கு அழகப்பா பல்கலைக்கழகம் மூலம் அந்த வாய்ப்பு அமையும். கலையும், கலைஞர்களும் காலந்தோறும் மாறும்போது மரபில் மாற்றம் ஏற்படுவது இயற்கையாகும். மரபும், நவீனமும் ஒருங்கிணையாமல் எந்த ஒரு கலையும் நிலைத்து நிற்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சிங்கப்பூர் கல்வி அமைச்சு தமிழ்மொழி மையம் பாட தலைவர் டாக்டர் ராமன், சிங்கப்பூர் மெக்னல்லி நுண்கலைகள் மைய தலைவர் டாக்டர் சந்திரசேகரன், புதுச்சேரி இந்திராகாந்தி தேசிய நுண்கலைகள் மைய இயக்குனர் ஜெயராமன், புதுடெல்லி பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய படிப்புகள் துறையைச் சேர்ந்த டாக்டர் உமாதேவி உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் நுண்கலைத்துறை நடன உதவி பயிற்றுனர் கனகதாரா நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்