பவானிசாகர் அருகே ஆற்றில் மூழ்கி 4 பேர் சாவு: பரிசல் ஓட்டுனருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை

பவானிசாகர் அருகே ஆற்றில் மூழ்கி 4 பேர் இறந்த வழக்கில் பரிசல் ஓட்டுனருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு் தீர்ப்பு கூறியது.

Update: 2019-12-12 23:00 GMT
கடத்தூர், 

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர்கள் ஆலன் பிரான்சிஸ் (வயது 22), ஆசா ஜெனிபர் (25), ஜோசப் பவுல்ராஜ் (32), ஜார்ஜ் அர்வின் (16). இவர்கள் 4 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கொத்தமங்கலத்தில் உள்ள உறவினர் எட்வின் ஜார்ஜ் (50) என்பவர் வீட்டுக்கு வந்து இருந்தனர்.

அதைத்தொடர்ந்து எட்வின் ஜார்ஜ் அவர்கள் 4 பேரையும் அழைத்துக்கொண்டு அந்த பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு சென்றார். அங்கு எட்வின் ஜார்ஜ் உள்பட 5 பேரும் ஆற்றில் பரிசலில் பயணம் செய்தனர். பரிசலை அதே பகுதியை சேர்ந்த குயிலான் என்கிற டேவிட் லாரன்ஸ் ஓட்டி சென்றார்.

இந்த நிலையில் அந்த பரிசலில் துவாரம் இருந்துள்ளது. அதன் வழியாக தண்ணீர் பரிசலில் புகுந்தது. இதனால் பரிசல் கவிழ்ந்தது. இதில் ஆற்றில் மூழ்கி ஆலன் பிரான்சிஸ், ஆசா ஜெனிபர், ஜோசப் பவுல்ராஜ், ஜார்ஜ் அர்வின் ஆகிய 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். எட்வின் ஜார்ஜ், டேவிட் லாரன்ஸ் ஆகியோர் நீந்தி கரை சேர்ந்தனர். இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி நடந்தது.

இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிசல் ஓட்டுனர் டேவிட் லாரன்சை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோபி 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் 4 பேர் சாவுக்கு காரணமான பரிசல் ஓட்டுனர் ேடவிட் லாரன்சுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் ரூ.1000 அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்