நாகர்கோவில் தளவாய்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அம்மன் கோவில் இடித்து அகற்றம்

நாகர்கோவில் தளவாய்தெருவில் ேபாக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அம்மன் கோவில் இடித்து அகற்றப்பட்டது.

Update: 2019-12-12 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோட்டார் ரெயில்வே ரோடு, கம்பளம் சாலை, ஒழுகினசேரி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் சாலையோர சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி உள்ளனர்.

இதே போல மீனாட்சிபுரம் தளவாய்தெருவிலும் சாலை அளவீடு செய்யப்பட்டு பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ளவை அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் தெருவின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த உச்சிமாகாளி மீனாட்சி அம்மன் கோவிலை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து கோவிலில் இருந்த சாமி சிலைகள் பாதுகாப்பாக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

போக்குவரத்து இடையூறு

இந்த நிலையில் கோவிலை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நேற்று நடந்தது. இந்த பணிகள் பகல் 11.30 மணிக்கு தொடங்கியது. இதற்காக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. பணிகள் முடிந்த பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தளவாய்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அம்மன் கோவிலை அகற்ற கோவில் நிர்வாகிகளே முன்வந்தனர். இதைத் தொடர்ந்து கோவிலை மீனாட்சி கார்டனில் அமைக்க இடம் கொடுக்கப்பட்டு உள்ளது. கோவில் அகற்றப்பட்ட பிறகு தளவாய்தெரு விரிவுபடுத்தப்பட்டு அந்த வழியாக ரெயில் நிலையம் செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்