ஆர்.எஸ்.மங்கலம் அருகே, கடலில் பாலம் கட்ட சவடு மண் கொட்டுவதற்கு எதிர்ப்பு - லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

ஆர்.எஸ்.மங்கலம் அருகே கடலில் பாலம் கட்ட சவடு மண் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-10 22:15 GMT
ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா உப்பூரில் அனல்மின் நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அனல்மின் உலைகளை குளிர்விப்பதற்கு தண்ணீர் எடுப்பதற்காக மோர்ப்பண்ணை கடற்கரையில் இருந்து கடலுக்குள் 8 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு வசதியாக சவடு மண் கடலுக்குள் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி, காரங்காடு, முள்ளிமுனை, தொண்டி உள்பட 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கடலில் பாலம் கட்டுவதால் மீனவ கிராமங்களுக்கு செல்வதற்கு கடற்கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் படகில் சுற்றிச்செல்ல வேண்டி உள்ளது. மேலும் கடலில் மீன்வளம் மற்றும் கடல்பாசி, கடல் குதிரை, பவளப்பாறைகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் கூறி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக நேற்று மாவட்ட கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் பாலம் கட்டுவதற்கு பெரிய லாரிகளில் சவுடு மண் கொண்டுவந்து கடலில் கொட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மண் ஏற்றி வந்த 12 லாரிகள், 3 மண் அள்ளும் எந்திரங்களை சிறைபிடித்தனர். மேலும் நாகனேந்தல் விலக்கு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மோர்ப்பண்ணை கிராம தலைவர் கோவிந்தன், திருப்பாலைக்குடி கிராம தலைவர் கர்ணன் ஆகியோர் தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சாந்தி, திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், கடலோர காவல்படை அதிகாரிகள், கனிமவள அதிகாரிகள் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தரப்பில் இனிமேல் கடலில் பாலம் கட்டும் வேலை நடைபெறாது என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக எழுதி தருமாறு வலியுறுத்தினர். ஆனால் இதற்கு அதிகாரிகள் சம்மதிக்காததால் சாலையில் அமர்ந்திருந்த பொதுமக்கள் வாகனத்துக்கு இடையூறு இல்லாமல் வழிவிட்டு அனல் மின் நிலையத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை தொடர்ந்து எழுப்பியபடி இருந்தனர்.

மேலும் செய்திகள்