மும்பை மாநகராட்சி தேர்தல்: மகளிருக்கு மாதம் ரூ.1,500- வாக்குறுதிகளை அள்ளி வீசிய உத்தவ் சிவசேனா கூட்டணி

மும்பை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, உத்தவ் சிவசேனா, நவநிர்மாண் சேனா கூட்டணி, தங்களது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.;

Update:2026-01-03 06:53 IST

மும்பை, 

மும்பையில் நடைபெற்ற நிகழ்வில், ஆதித்ய தாக்கரே எம்.எல்.ஏ. மற்றும் நவநிர்மாண் கட்சியின் முக்கிய தலைவர் அமித் தாக்கரே ஆகியோர் இந்த திட்டங்களை விளக்கினர். இதில் முக்கியமான பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் லாட்கி பகின் திட்டம் போன்று ‘சுவாபிமான் நிதி’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் வீட்டு வேலை செய்யும் பெண்கள் மற்றும் கோலி (மீனவ) சமூக பெண்களுக்கு மாதம் ரூ. 1,500 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல சிவ்போஜன் திட்டம் போன்று மறைந்த மீனாத்தாய் தாக்கரே நினைவாக, காலை உணவு மற்றும் மதிய உணவை தலா ரூ. 10-க்கு உணவு வழங்கும் உணவகங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.அதுமட்டும் இன்றி 700 சதுர அடி வரையிலான வீடுகளுக்கு சொத்து வரி முழுமையாக ரத்து, மராத்திய மக்களுக்காக மலிவு விலையில் வீடுகள், பெஸ்ட் பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 10-லிருந்து ரூ. 5-ஆக குறைக்கப்படும். புதிய பஸ்களும், புதிய வழித்தடங்களும் அறிமுகப்படுத்தப்படும்,

மாநகராட்சி மருத்துவமனைகளில் 5 புதிய மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்படும். கட்டிடங்களில் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் ஒரு வாகன நிறுத்துமிடம் உறுதி செய்யப்படும்.டெலிவரி மற்றும் இதர பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மின்சார பைக்குகள் வாங்க ரூ. 25 ஆயிரம் வட்டி இல்லாத கடன் வழங்கப்படும், செல்லப்பிராணிகளுக்கென பிரத்யேகப் பூங்காக்கள், மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் உருவாக்கப்படும்.புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஏதுவாக, நகரில் புதிய புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படும்,

வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் வசதிக்காக, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குழந்தை பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும். மேலும் முழுமையான தேர்தல் அறிக்கை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்