வாடகை செலுத்தாத, உரிமம் பெறாத கடைகளுக்கு ‘சீல்’ புதுவை நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

புதுவை நகராட்சி கட்டிடத்திற்கு வாடகை செலுத்தாத, வணிக உரிமம் பெறாத 3 கடைகளுக்கும் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2020-03-11 23:46 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி நேரு வீதியில் குபேர் அங்காடி உள்ளது. இந்த அங்காடியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இவை புதுவை நகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்த அங்காடியில் உள்ள 2 புத்தக கடைகளை ராதாகிருஷ்ணன், அக்பர் என்பவர்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் பல மாதங்களாக கடைகளுக்கான வாடகையை நகராட்சிக்கு செலுத்தாமல் இருந்தனர். இதுகுறித்து அவர்களுக்கு நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

கடைகளுக்கு ‘சீல்’

இந்த நிலையில் நேற்று புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரி திருமால் மற்றும் நகராட்சி ஊழியர்கள் வாடகை செலுத்தாமல் இருந்த ராதாகிருஷ்ணன், அக்பர் ஆகியோரின் கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர். இதற்கு குபேர் அங்காடியில் உள்ள மற்ற கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்களுடைய கடைகளை மூடிவிட்டு நேரு வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

இதேபோல் புவன்கரே வீதியில் உள்ள ஒரு தனியார் வாகன சர்வீஸ் நிறுவனம் வணிக உரிமம் பெறாமல் இருந்து வந்தது. இதுகுறித்து நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியும் நிறுவனம் உரிய பதிலளிக்கவில்லை. அதையடுத்து அந்த வாகன சர்வீஸ் நிறுவனத்திற்கும் நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

மேலும் செய்திகள்