பைகுல்லாவில் 1,000 படுக்கைகளுடன் கொரோனா தற்காலிக மருத்துவமனை

பைகுல்லாவில் 1,000 படுக்கைகளுடன் கொரோனா தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.;

Update:2020-06-21 04:51 IST
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் பிற்பகுதியில் இருந்து கடந்த 2 மாதத்துக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்தும் இந்த நோய் பரவல் குறைந்தபாடில்லை. மாநில தலைநகர் மும்பையில் தான் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு, மாநகராட்சி மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளையும் பயன்படுத்தி வருகிறது. இதுதவிர திறந்தவெளி மைதானங்கள், சீரமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடங்களையும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பைகுல்லாவில் 1,000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

50 டாக்டர்கள்

பைகுல்லாவில் உள்ள ரிச்சர்ட்சன் அண்டு கிருதாஸ் லிமிடெட் வளாகத்தில் கொரோனா தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்.

இங்கு 300 ஐ.சி.யூ. படுக்கைகள், ஆக்சிஜன் சப்ளை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கும். இந்த மருத்துவமனையில் 50 டாக்டர்கள், 100 நர்சுகள், 150 வார்டுபாய்கள் மற்றும் பிற பணியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுவார்கள். தேவைக்கேற்ப ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே மும்பையில் ஒர்லி என்.எஸ்.சி.ஐ. அரங்கம், கோரேகாவில் உள்ள நாஸ்கோ கண்காட்சி மையம், பி.கே.சி.யில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானம் ஆகியவற்றில் தற்காலிக கொரோனா மருத்துவமனைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்