ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களில் பயன் அடைந்தது யார்? பெயர்களை வெளியிடும்படி ராகுல்காந்திக்கு, பா.ஜனதா வற்புறுத்தல்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களில் பயன் அடைந்தவர்களின் பெயர்களை காங்கிரஸ் வெளியிடவேண்டும் என்று ராகுல்காந்தியை பா.ஜனதா வற்புறுத்தி உள்ளது. பா.ஜனதா பதிலடி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி பிரதமர

Update: 2016-12-28 23:15 GMT

புதுடெல்லி,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களில் பயன் அடைந்தவர்களின் பெயர்களை காங்கிரஸ் வெளியிடவேண்டும் என்று ராகுல்காந்தியை பா.ஜனதா வற்புறுத்தி உள்ளது.

பா.ஜனதா பதிலடி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி பிரதமர் மோடிக்கு நேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். நவம்பர் 8–ந்தேதிக்கு முந்தைய 2 மாதங்களில் வங்கி கணக்கில் ரூ.25 லட்சத்துக்கும் அதிகமாக பணம் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலை மோடி வெளியிடவேண்டும் என்றும் அப்போது அவர் வற்புறுத்தினார்.

இதற்கு பா.ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:–

பயன் அடைந்தவர்கள் யார்?

ராகுல்காந்தி ஏராளமான கேள்விகளை கேட்டு இருக்கிறார். திரும்பத் திரும்ப ஒரு பொய்யை சொன்னால் அது உண்மையாகி விடும் என்ற நம்பிக்கையில் தினமும் உரத்த குரலில் எதையாவது கூறி வருகிறார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் கூறுகிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நடந்த ரூ.1.86 லட்சம் கோடி 2ஜி ஊழல், ரூ.72 ஆயிரம் கோடி காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ரூ.3,200 கோடி ஹெலிகாப்டர் பேர ஊழல் ஆகியவற்றில் பயன் அடைந்தவர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலை அவர் கூற வேண்டும். அவர்களுடைய பெயர்களை வெளியிட வேண்டும். இதில் காங்கிரஸ் அடைந்த பெரும் லாபத்தையும் வெளியே தெரிவிக்க வேண்டும்.

ஹெலிகாப்டர் பேர ஊழல் தற்போது அதற்குரியவர்களின் வீட்டு வாசலை எட்டி இருக்கிறது. அதனால்தான் மிகவும் ராகுல்காந்தி பதற்றப்படுகிறார்.

முடக்கிய பிறகும் கடன்

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய பட்டியல் 2011–ம் ஆண்டில் இருந்தே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் இருந்தது. ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுபற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட வில்லை. இதற்கான பதிலையும் ராகுல்காந்தி தெரிவிக்க வேண்டும்.

தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு 2012–ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ.36 ஆயிரம் கோடி கடன் வழங்கியது. அதே ஆண்டு அவருடைய வங்கிக் கணக்கை சி.பி.ஐ. முடக்கிய பிறகும் அவருக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடியை கடனாக வழங்கியது. இது ஏன்? என்பதை ராகுல்காந்தி விளக்க வேண்டும்.

ஏன் செயல்படுத்தவில்லை?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தினமும் சராசரியாக 695 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஒட்டு மொத்தமாக இந்த எண்ணிக்கை 2.5 லட்சத்துக்கும் அதிகம்.

அதேநேரம் மோடியின் அரசு விவசாயிகளை பாதுகாக்க ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாசல பிரதேசம் போன்ற மாநிலங்களில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டம் ஏன் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் ராகுல்காந்தி விளக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்