கடந்த ஆண்டு டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வரிவசூல் எவ்வளவு...? - வெளியான தகவல்
ஜி.எஸ்.டி. வருவாய் நாட்டின் பொருளாதார செயல்பாடு, நுகர்வு நிலை மற்றும் வரி சீர்திருத்தங்களின் விளைவுகளை பிரதிபலிக்கிறது.;
புதுடெல்லி,
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய வருவாய் ஆதாரமாகும். உள்நாட்டு விற்பனை, இறக்குமதி பொருட்கள், சேவைகள் உள்ளிட்டவற்றில் இருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வருவாய் நாட்டின் பொருளாதார செயல்பாடு, நுகர்வு நிலை மற்றும் வரி சீர்திருத்தங்களின் விளைவுகளை பிரதிபலிக்கிறது.
மத்திய நிதித்துறை அமைச்சகம் வசூலித்து, கணக்கீடு செய்து, வெளியிடும் மாதாந்திர ஜி.எஸ்.டி. வசூல் தரவுகள் பொருளாதார வளர்ச்சியின் திசையை காட்டும் முக்கியக் குறியீடாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டில் செப்டம்பர் 22-ந்தேதி ஜி.எஸ்.டி வசூலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் நாட்டில் 375 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் வசூலான மொத்த ஜி.எஸ்.டி. வசூல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று தகவல் தெரிவித்தது. அதன்படி 2025-ம் ஆண்டு டிசம்பரில் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆனது. இது 2024-ம் ஆண்டு டிசம்பர் மாத வசூலை காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். அப்போது ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலானது.
உள்நாட்டு பரிவர்த்தனைகளில் இருந்து மொத்த வருவாய் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் கோடியாகும். இது அதற்கு முந்தைய ஆண்டு வசூலை காட்டிலும் 1.2 சதவீதம் அதிகமாகும். இறக்குமதி பொருட்களில் இருந்து கிடைத்த வருவாய் 19.7 சதவீதம் உயர்ந்து ரூ.51 ஆயிரத்து 977 கோடியானது.
திருப்பிச் செலுத்தப்பட்ட (ரீபண்ட்) தொகை, 31 சதவீதம் உயர்ந்து ரூ.28 ஆயிரத்து 980 கோடியாக இருந்தது. ரீபண்ட் தொகையை கழித்த பின்னான நிகர ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடியை கடந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.2 சதவீத உயர்வாகும். ஜி.எஸ்.டி.க்கு மேல் வசூலிக்கப்படும் வரி இழப்பீடு செஸ் எனப்படும். புகையிலை, ஆடம்பர கார்கள், நிலக்கரி, மது உள்ளிட்டவற்றுக்கு வசூலிக்கப்பட்டு வந்தது.
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்துக்கு பின்னர் புகையிலை, மது உள்ளிட்டவற்றை தவிர்த்து மற்ற பொருட்களுக்கு செஸ் வரி ரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த மாதத்தில் ரூ.4 ஆயிரத்து 238 கோடியாக குறைந்தது. இது 2024 டிசம்பரில் வசூலிக்கப்பட்ட ரூ.12 ஆயிரம் கோடியுடன் ஒப்பிடுகையில் 64.7 சதவீதம் வீழ்ச்சியாகும்.