சிபிஎம் கட்சியினர் விரக்தியில் பாஜகவினரை தாக்குகின்றனர் - கேரள பாஜக தலைவர் அறிக்கை

கேரள மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரான ஓ ராஜகோபால் சிபிஎம் கட்சியினர் விரக்தியில் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டினார்.;

Update:2017-08-11 20:33 IST
திருவனந்தபுரம்

கேரள சட்டப்பேரவையின் ஒரே உறுப்பினரான ஓ ராஜகோபால் அறிக்கை ஒன்றில் பாஜகவானது மாநிலத்தில் வளர்ந்து வருவது கண்டு சிபிஎம் விரக்தியடைந்து வன்முறையைத் தூண்டுவதாக குற்றஞ்சாட்டினார்.

குறிப்பாக பிற்பட்ட சமூகத்தினரின் ஆதரவு பாஜகவிற்கு அதிகரித்து வருவதால் சிபிஎம் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளதாக அவர் கூறினார். இதுவரை அவர்களின் ஆதரவு இடதுசாரி கட்சிக்கே கிடைத்து வந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். 

அக்கட்சியினர் பேச்சுரிமை, சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை பற்றி பேசி வருகின்றனர். ஆனால் கேரளாவில் அவர்கள் சகிப்பின்மையை நடைமுறையில் கொண்டுள்ளனர் என்றார் ராஜகோபால். பாஜக மட்டுமல்ல காங்கிரஸ், சிபிஐ மற்றும் இன்னும் சில கட்சிகள் மீது வன்முறையை ஏவியுள்ளனர் என்றார் அவர்.

சிபிஎம் கட்சியினர் மாநிலத்தில் பாஜகவினர் தங்கள் அரசியல் பணியை செய்ய அனுமதிப்பதில்லை; குறிப்பாக முதல் பினராயி விஜயனின் கண்ணூர் மாவட்டத்தில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மாநிலம் முழுதும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் விவரித்தார். ”அவர்கள் கட்சி கிராமங்களை உருவாக்கியுள்ளனர். அங்கு மாற்று கட்சியினரை உள்ளே நுழையக்கூட விடுவதில்லை. அங்குள்ளவர்கள் சிபிஎம்மிற்கு வாக்களிப்பவர்களாக தெரிகின்றனர்” என்றார் ராஜகோபால். 

பாஜக மாநிலத்தில் காலூன்றி வருகிறது. சில நகராட்சித் தேர்தல்களில் அது சிபிஎம்மிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்றார் ராஜகோபால்.

அனைத்திலும் மேலாக 1980 ஆம் ஆண்டு செய்து கொண்ட நடத்தை விதிமுறை ஒப்பந்தப்படி சிபிஎம் கட்சியினர் நடந்து கொள்வதில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் செய்திகள்