ஜனாதிபதி மாளிகையில் முதன்முறையாக... பிரிட்டிஷ் வீரர்களுக்கு பதிலாக பரம் வீர் சக்ரா விருது வென்றவர்களின் புகைப்படங்கள்

காலனி ஆதிக்க மனப்பான்மையை விடுத்து, இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் மரபுகளின் செழுமையை, பெருமையை தழுவுவதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கை தொடங்கியுள்ளது.;

Update:2025-12-17 23:42 IST

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், பிரிட்டிஷ் வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், காலனி மனப்பான்மையை போக்கும் வகையில் அந்த புகைப்படங்களை நீக்கி விட்டு அவற்றிற்கு பதிலாக, பரம் வீர் சக்ரா விருது வென்றவர்களின் புகைப்படங்களை வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, பரம் வீர் சக்ரா விருது வென்ற அனைத்து 21 இந்திய வீரர்களின் புகைப்படங்களை கொண்ட பரம் வீர் திர்கா என்ற புதிய கேலரி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்துள்ளார்.

இந்திய தேசத்தின் நாயகர்களின் புகைப்படங்களை கொண்ட புதிய கேலரியை திறந்து வைத்ததன் மூலம், காலனி ஆதிக்க மனப்பான்மையை விடுத்து, இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் மரபுகளின் செழுமையை, பெருமையை தழுவுவதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கை தொடங்கியுள்ளது.

போரின்போது, துணிச்சல், தைரியம் மற்றும் உயிர்த்தியாகம் செய்வது போன்ற தனித்துவ செயல்களில் ஈடுபடுவதற்காக இந்திய ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருது பரம் வீர் சக்ரா விருது ஆகும்.

இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றிற்காக உயரிய தியாகம் செய்த, இடர்பாடான சூழலிலும் மிரட்டலுக்கு பணியாமல் நாட்டிற்காக துணிச்சலாக செயல்பட்ட நாயகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த புதிய கேலரி அமையும் என்று பிரதமர் மோடி சுட்டி காட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்