டெல்லி காற்று மாசை கட்டுப்படுத்த இன்றிரவு முதல்... அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு

டெல்லியில் காணப்படும் காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு இறங்கியுள்ளது.;

Update:2025-12-17 22:45 IST

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடும் குளிர், பனி மற்றும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. ஆனந்த் விகார், இந்தியா கேட் உள்ளிட்ட டெல்லியின் முக்கிய பகுதிகளில் நாளுக்கு நாள் காற்று தர குறியீடு மிக மோசமடைந்து வருகிறது. இதனால், குழந்தைகள், முதியவர்கள் சுவாச பாதிப்புக்கு இலக்காகின்றனர்.

காலையிலேயே பனி படர்ந்து தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது. டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளிலும் பனிப்போர்வை போர்த்தியது போன்று உள்ளது. இதனால், வாகனங்கள் சாலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்லும் நிலை காணப்படுகிறது. பல பகுதிகளிலும் காலையிலேயே பனி மூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் பனி அடர்ந்த சூழலால், தெளிவற்ற வானிலை ஏற்பட்டு சில நாட்களாகவே டெல்லி விமான நிலையத்தில் விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், விமான பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

இந்நிலையில், டெல்லியில் காணப்படும் காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு இறங்கியுள்ளது. இதில், ஒரு முக்கிய நடவடிக்கையாக வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழை அரசு கட்டாயப்படுத்தி உள்ளது. இதன்படி வாகன ஓட்டிகளிடம் இந்த சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும்.

அதனை வைத்திருப்பவர்களுக்கே பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் அல்லது டீசல் வழங்கப்படும். இதனை கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்படும். அப்படி இல்லாத வாகனங்களுக்கு இனி எரிபொருள் கிடைக்காது. இதேபோன்று டெல்லியில் பதிவு செய்யப்படாத வாகனங்கள் நகருக்குள் நுழைவதற்கு தடை மற்றும் கட்டுமான பணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் போன்றவையும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்