சிபிஐ சர்ச்சை: பிரதமர் மோடி மீது சரத்பவார் கடும் தாக்கு

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடுமையாக விமர்சித்தார்.

Update: 2018-10-23 10:16 GMT
மும்பை,

மத்திய அரசு செயல் திறன் மிக்க அரசாங்கமாக இருந்திருந்தால், சிபிஐயின் உயர்மட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்திருக்காது என்றும் , இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். அதேபோல், ரபேல் விவகாரத்திலும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ள சரத்பவார், ரபேல் ஊழல் குற்றச்சாட்டில், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றார். 

மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் கேட்ட போது, பிரதமர் மோடி 2014-ல் கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் கள அளவில் காண முடியவில்லை. சிறப்பான அரசாங்கம் கொடுப்பதற்காக மன்மோகன் சிங் தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டார். அவரது நோக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால், அத்தகைய ஒரு சூழல் தற்போது இல்லை. தற்போதைய அரசாங்கம் செயல்திறன் மிக்கதாக இருந்தால், சிபிஐயின் உயர்மட்டத்தில், ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்காது. 

பிரதமர் மோடி இன்னமும் மவுனம் காக்கிறார். மோடி கண்டிப்பாக இதில் செயல் பட வேண்டும். பாரதீய ஜனதா கட்சியின் வலுவான தலைவராக இருக்கும் மோடி, நாட்டுக்கு வலுவான தலைவராக இல்லை. பிரதமர் அலுவலகம் மட்டுமே அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. அனைத்து முடிவுகளும் பிரதமர் அலுவலகத்தில் எடுக்கப்பட்டு கையெழுத்திற்காக மட்டுமே மந்திரிகளுக்கு அனுப்பப்படுகிறது. நடப்பு அரசு மன் கி பாத் ( மனதில் இருந்து பேசுகிறேன்) மட்டுமே செய்கிறது. ஜன் கி பாத் (மக்களின் குரல்) கேட்பதில்லை. 

ரபேல் விவகாரத்தை பொறுத்தவரை, ரபேல் போர் விமானத்தின் விலை 570 கோடியில் இருந்து ரூ.1,600 கோடியாக உயர்த்தப்பட்டது ஏன்? என்று மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சந்தேகத்திற்கு இடம் இருக்கிறது. எனவே, பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும். போபர்ஸ் ஊழல் வழக்கிற்காக மூன்று வாரங்கள் பாராளுமன்றத்தை பாஜக முடக்கும் என்றால், தற்போது, அதிகாரத்தில் இருக்கும் பாஜக ஏன், கூட்டுக்குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்றார். 

மேலும் செய்திகள்