6 முதல் 9-ந் தேதிக்குள் தொகுதி மறுசீரமைப்பு குழுவினர் காஷ்மீர் பயணம்
இந்த குழுவினர் வருகிற 6 முதல் 9-ந் தேதிக்குள் காஷ்மீர் செல்ல உள்ளனர்.;
புதுடெல்லி,
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் சட்டசபை கொண்ட காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் சமீபத்தில் ஆலோசனை நடந்தது.
இதன் தொடர்ச்சியாக அங்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அந்தவகையில் அங்கு புதிய சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளை வரையறை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு தொகுதி மறுசீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
அந்தவகையில் இந்த குழுவினர் வருகிற 6 முதல் 9-ந் தேதிக்குள் காஷ்மீர் செல்ல உள்ளனர். அங்கு அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் இந்த குழுவினர், இந்த பணிகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்வார்கள் என தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.