டெல்லி அதிகாரிகள் நியமன மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா கடும் அமளிகளுக்கு இடையே மக்களவையில் நிறைவேறியது.

Update: 2023-08-03 14:16 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

9 நாட்களாக மக்களவை முடங்கிய நிலையில் டெல்லி மசோதா தொடர்பாக இன்று விவாதம் தொடங்கியது. இந்த நிலையில் டெல்லி அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதாவை மத்திய மந்திரி அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகளின் பதவிக்காலம், ஊதியம், இடமாற்றம் தொடர்பான பல்வேறு விஷயங்களில் விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை சொல்லும் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே டெல்லி மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அம்மாநில முதல்-அமைச்சர்களை சந்தித்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் டெல்லி அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதா கடும் அமளிகளுக்கு இடையில் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பாரதிய ராஷ்ட்டிரிய சமிதி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆம் ஆத்மி எம்பி சுசில்குமார் ரின்கு ஆவணங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசியதால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக ஓம்.பிர்லா தெரிவித்தார். டெல்லி அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதா நிறைவேறிய நிலையில் மக்களவை நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்