பான் மசாலாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

பான் மசாலா பொருட்கள் தற்போது 40 சதவீதம் ஜி.எஸ்.டி.யின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.;

Update:2025-12-06 02:24 IST

புதுடெல்லி,

பான் மசாலா மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியாவதை தொடர்ந்து, அதற்கு பதிலாக கூடுதல் வரி விதிக்கும் வகையில் சுகாதாரம் மற்றும் தேச பாதுகாப்பு செஸ் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது நேற்று முன்தினம் முதல் விவாதம் நடந்தது. இந்த விவாதத்துக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒரு செஸ் வரியை விதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவு 270-ன் கீழ் அரசியலமைப்பு அதிகாரம் உள்ளது. அந்த வகையில் பான் மசாலா மற்றும் அதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்வதற்காக நிறுவப்பட்ட எந்திரங்கள் அல்லது மேற்கொள்ளப்படும் பிற செயல்முறைகளுக்கு செஸ் வரி விதிப்பதன் மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்துக்கான செலவினங்களைச் சந்திப்பதற்கான நிதிக்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த செஸ் வரி மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை, மாநிலங்களுக்கான சுகாதார செலவினங்களுக்காக மத்திய அரசு வழங்கும். நுகர்வு அடிப்படையில் பான் மசாலா பொருட்கள் தற்போது 40 சதவீதம் ஜி.எஸ்.டி.யின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செஸ் மூலம் ஜி.எஸ்.டி. வருவாயில் எந்த தாக்கமும் இருக்காது.

இந்த 40 சதவீத ஜி.எஸ்.டி.க்கு மேல் பான் மசாலா உற்பத்தி தொழிற்சாலைகளில் எந்திரங்களின் உற்பத்தி திறனின் மீது சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் விதிக்கப்படும். இந்த செஸ் மூலம் கிடைக்கும் அனைத்து நிதியும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் தணிக்கைக்கு உட்பட்டது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.

Tags:    

மேலும் செய்திகள்