நிலத்தகராறு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை - ம.பி.யில் அதிர்ச்சி சம்பவம்
மத்தியப் பிரதேசத்தில் நிலத்தகராறு காரணமாக 3 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.;
கோப்புப்படம்
போபால்,
மத்தியப் பிரதேசம் மாநிலம் மொரினா மாவட்டத்தில் உள்ள லேபா கிராமத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் நிலத்தகராறின் காரணமாக மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மொரினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக நில உரிமை தொடர்பாக ரஞ்சித் தோமர், ராதே தோமர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இடையே நீண்ட காலமாக தகராறு நிலவி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ரஞ்சித் தோமரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராதே தோமரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கொன்றனர். பின்னர் கிராமத்தை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரஞ்சித் தோமரின் குடும்பத்தினர் கிராமத்திற்கு திரும்பி வந்தனர். இதையடுத்து அவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் ராதே தோமரின் குடும்பத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, குற்றவாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.