கர்நாடகத்தின் வளர்ச்சியில் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது

கர்நாடகத்தின் வளர்ச்சியில் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது என்று கூறிய தற்காலிக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

Update: 2023-05-16 18:30 GMT

பெங்களூரு, மே.17-

பெரும் பாதிப்புகள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததை அடுத்து முதல்-மந்திரி பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்துவிட்டார். புதிய அரசு அமையும் வரையில் முதல்-மந்திரி பதவியில் நீடிக்குமாறு கவர்னர் கேட்டுக் கொண்டதை அடுத்து அவர் தற்காலிகமாக முதல்-மந்திரி பதவியில் நீடிக்கிறார். இந்த நிலையில் கர்நாடக அரசில் பணியாற்றி வரும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் பசவராஜ் பொம்மை பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது தனது பணி காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகளுக்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நாம் அரசியல் சாசனத்தை ஏற்று அதன்படி நடந்து கொள்கிறோம். ஆட்சியை நடத்துவதில் நிர்வாகம், சட்டசபை மற்றும் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. நான் முதல்-மந்திரி பதவி ஏற்றதும் கொரோனா பரவல் ஏற்பட்டது. வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பெரும்பாதிப்புகள் உண்டாகின. இத்தகைய சவால்களுக்கு மத்தியில் கடந்த 4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை நடத்தியுள்ளோம்.

வன்முறைகள் நிகழவில்லை

பா.ஜனதா ஆட்சியில் வன்முறைகள் நிகழவில்லை. தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்காக போலீஸ் துறையை பாராட்டுகிறேன். எனது ஆட்சியில் பல்வேறு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் இட ஒதுக்கீடு உயர்வு, அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. புதிய கொள்கைகளை வகுத்தோம். அரசின் திட்டங்களை செயல்படுத்துவது மற்றும் முக்கிய முடிவுகளை எடுப்பதில் நீங்கள் முக்கிய பங்காற்றி இருக்கிறீர்கள்.

நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் 5 ஆண்டுகள் இருக்கிறோம். அதன் பிறகு வேறு கட்சியினர் வந்து விடுவார்கள். ஆனால் நீங்கள் நீண்ட காலத்திற்கு அதிகாரத்தில் இருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் உங்களை கடிந்து கொண்டு இருப்பேன். ஆனால் அதில் தனிப்பட்ட தாக்குதல் இருந்தது இல்லை.

கர்நாடக வளர்ச்சி

முதலீடுகளை ஈர்ப்பது, ஜி.எஸ்.டி. வசூல் போன்றவற்றில் கர்நாடகம் முன்னிலையில் உள்ளது. கர்நாடகத்தின் வளர்ச்சியில் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. நாம் அனைவரும் சேர்ந்து கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்