திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபத்திருவிழா.. நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு
திருப்பதியில் தீபத்திருவிழாவையொட்டி சஹஸ்ர தீப அலங்கார சேவை, பௌர்ணமி கருடசேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.;
திருப்பதி தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால், கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் தங்கக்கொடி மரத்தில் நெய்தீபம் ஏற்றினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது. மூலவர் ஏழுமலையானுக்கு நேற்று மாலை கைங்கர்யங்கள், நிவேதனங்கள் நிறைவடைந்த பிறகு தீபத்திருவிழா நடந்தது. தீபங்களை ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள், அர்ச்சகர்கள் தங்கள் கைகளில் ஏந்தியவாறு விமானப் பிரதட்சணம் செய்தனர். அதன்பிறகு ஆனந்த நிலையத்தில் எழுந்தருளிய ஏழுமலையானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கருவறை, அகண்டம், குலசேகரப்படி, ராமுலவாரி மேடை, துவார பாலகர்கள், கருடாழ்வார், வரதராஜசாமி சன்னதி, வகுளமாதா, தங்கக்கிணறு, கல்யாண மண்டபம், பாஷ்யகாரர் சன்னதி, யோக நரசிம்மர், விஷ்வக்ஸேனர், சந்தன அறை, பரிமள அறை, வெள்ளி வாசல், கொடிக்கம்பம், பலிபீடம், சேத்ரா பாலகர் சன்னதி, திருமலைராய மண்டபம், பூலபாவி (பூக்கிணறு), ரங்கநாயக்கர் மண்டபம், மகாதுவாரம், பேடி ஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில், ஸ்ரீவாரி புஷ்கரணி என கோவிலுக்கு உள்ளேயும் வெளியிலும் பல்வேறு இடங்களில் நெய் தீபங்கள் ஏற்றப்பட்டன.
தீபத்திருவிழாவையொட்டி கோவிலில் நேற்று சஹஸ்ர தீப அலங்கார சேவை, பௌர்ணமி கருடசேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட உள்ளூர் கோவில்களான திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், திருப்பதி கோதண்டராமர் கோவில், நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், கார்வேட்டிநகரம் ருக்மினி, சத்யபாமா சமேத வேணுகோபாலசாமி கோவில்களில் நேற்று மாலை கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடந்தது. தீப ஒளியில் கோவில்கள் ஜொலித்தன.