பாகல்கோட்டை அருகே வாகனம் மோதி 4 பேர் சாவு

பாகல்கோட்டை அருகே வாகனம் மோதி சாலையோரம் நின்ற 4 பேர் பலியானார்கள். தலைமறைவாகி விட்ட டிரைவரை போலீசார் தேடிவருகிறார்கள்.;

Update:2022-06-03 20:29 IST

பாகல்கோட்டை:

லாரி டயர் பஞ்சரானது

பாகல்கோட்டை மாவட்டம் பீலகி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாடேகுந்தி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு 11 மணியளவில் வெங்காயம் ஏற்றி சென்ற ஒரு லாரியின் டயர் பஞ்சரானது. இதன் காரணமாக லாரியை சாலையோரம் டிரைவர் நிறுத்தினார். இதுபற்றி டிரைவரான நாசீர் முல்லா தனது உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அவர், பஞ்சரான டயரை சரி செய்வதற்காக சரக்கு ஆட்டோவில் 4 பேரை பாடேகுந்தி பகுதிக்கு அனுப்பி வைத்திருந்தார். இதையடுத்து, பஞ்சரான லாரியின் டயரை கழற்றி சரி செய்யும் பணியில் மெக்கானிக் ஈடுபட்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் லாரியின் அருகே சாலையோரம் நாசீர் முல்லா உள்பட 4 பேர் நின்று கொண்டு இருந்தார்கள்.

4 பேர் சாவு

இந்த நிலையில், அதே தேசிய நெடுஞ்சாலையில் வந்த ஒரு வாகனம் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற 4 பேர் மீதும் மோதியது. மோதிய வேகத்தில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டார்கள். உடனே வாகனத்தை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக ஓட்டி சென்று விட்டார். இந்த நிலையில், வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்ததும் பீலகி போலீசார் விரைந்து வந்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த ரஜாக் தாம்போலி(வயது 54), நாசீர் முல்லா(42), மல்லப்பா மடலி(42), ராமசுவாமி(36) என்று தெரிந்தது. மேலும் விஜயாப்புராவில் இருந்து டிரைவர் நாசீர் முல்லா பெங்களூருவுக்கு வெங்காயத்தை ஏற்றி வந்ததும் தெரியவந்தது. விபத்துக்கு காரணமான வாகனம் பற்றிய தகவல்கள் தெரியவில்லை. டிரைவர் அதிவேகமாக ஓட்டியதே 4 பேர் சாவுக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பீலகி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்