மங்களூரு; ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வேளாண்துறை இணை இயக்குனர் கைது

வனத்துறை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கவேண்டிய பாக்கி தொகையை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வேளாண்துறை இணை இயக்குனரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-22 18:45 GMT

மங்களூரு-

வனத்துறை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கவேண்டிய பாக்கி தொகையை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வேளாண்துறை இணை இயக்குனரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

மரக்கன்று நடும்பணி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு வேளாண்துறை அலுவலகத்தில் மண்டல வனத்துறை அலுவலராக இருந்தவர் பரமேஷ். இவர் ேவளாண்துறையில் மத்திய அரசு அமல்படுத்திய பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கான இலவச மரக்கன்றுகளை பொதுமக்களிடம் வழங்கினார். இந்த மரக்கன்றுகளின் மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது. அதன்படி மரக்கன்றுகளை வினியோகம் செய்த தோட்டக்கலை துறைக்கு ரூ.18 லட்சம் மற்றும் மரக்கன்றுகளை நடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.32 லட்சம் வழங்கவேண்டியிருந்தது.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் பரமேஷ் ஓய்வு பெற்றார். இதனால் வனத்துறை ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு வழங்கவேண்டிய ரூ.32 லட்சத்தை உடனே வழங்கவேண்டும் என்று நெருக்கடி கொடுத்தனர். இதை ஏற்ற பரமேஷ் உடனே வேளாண்துறை இணை இயக்குனர் பரதம்மாவை நேரில் சந்தித்து வனத்துறை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை ரூ.32 லட்சத்தை விடுவிக்கும்படி கூறினார்.

லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

அதற்கு பரதம்மா அந்த பணத்தை விடுவிக்கவேண்டும் என்றால் ரூ.1 லட்சம் லஞ்சமாக வழங்கவேண்டும் என்று கூறினார். இதற்கு சம்மதம் தெரிவித்த பரமேஷ், லோக் அயுக்தா போலீசில் இதுகுறித்து ரகசிய புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் லோக் அயுக்தா போலீசார் பரமேசிற்கு ஆலோசனை வழங்கி ரசாயனம் தடவிய ரூ.1 லட்சத்தை கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை பரமேஷ், வேளாண்துறை இணை இயக்குனர் பரதம்மாவிடம் வழங்கினார்.

அப்போது பரதம்மா பணத்தை வாங்கியதும், மறைந்திருந்த லோக் அயுக்தா போலீசார், அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த லோக் அயுக்தா போலீசார் பரதம்மா மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்