கனமழையால் சாலைகளில் வெள்ளம்; மரம் விழுந்து 2 பேர் பலி - அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது

மும்பையில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது. மரம் விழுந்து 2 பேர் பலியானார்கள்.;

Update:2023-06-29 01:15 IST

மும்பை, 

மும்பையில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது. மரம் விழுந்து 2 பேர் பலியானார்கள்.

கனமழை

மும்பையில் வழக்கமாக ஜூன் மாதம் 2-வது வாரத்திலேயே மழைக்காலம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு மிகவும் தாமதமாக கடந்த வார இறுதியில் தான் மழை எட்டிப்பார்த்தது. இருப்பினும் கடந்த நான்கைந்து நாட்களாக மும்பையில் மழை பரவலாக பெய்து வருகிறது. இதேபோல நேற்று நகரில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சாலைகளிலும் மழைவெள்ளம் ஆறுபோல ஓடியது.

போக்குவரத்து தடை

மழை காரணமாக தண்டவாளத்தில் தண்ணீர் ஓடியதால் மின்சார ரெயில்கள் சில நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்தேரி சுரங்கப்பாதையில் வாகன போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் எஸ்.வி. சாலை நோக்கி திருப்பி விடப்பட்டன. நேற்று மட்டும் மழையின் போது நகரில் 26 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, 15 இடங்களில் மின்சார இணைப்பில் பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் 5 வீடுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளது.

2 பேர் பலி

இந்தநிலையில் கோரேகாவ் மிதாநகர் பகுதியில் பிற்பகல் 3.35 மணி அளவில் ஒரு வீட்டின் மீது மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த பிரேம்லால் (வயது30) என்பவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதேபோல மலாடு மம்லேதர்வாடி சந்திப்பு பகுதியில் மரம் சரிந்து விழுந்தது. இதில் கவுசல் தோஷி (38) என்பவர் காயமடைந்தார். அவரை சதாப்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

அதிகாரிகள் ஆய்வு

பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சாகல் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் பாந்திரா- குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள மித்தி நதிக்கரை, ஒர்லியில் கட்டப்படும் கடற்கரை சாலை பகுதி மற்றும் மும்பையில் சில பகுதிகளுக்கு சென்று கனமழையின் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். மும்பையின் கிழக்கு புறநகர் பகுதியில் நேற்று 4.24 செ.மீட்டர் மழையும், மேற்கு புறநகர் பகுதியில் 4.04 செ.மீட்டர் மழையும் பதிவானது. இன்றும் நகரின் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் தீவிரமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்