ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ரூ.33 லட்சம் தங்க கிரீட காணிக்கை- 80 வயது டாக்டர் வழங்கினார்

ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ரூ.33 லட்சம் தங்க கிரீட காணிக்கையாக 80 வயது டாக்டர் ஒருவர் வழங்கினார்.

Update: 2022-07-22 13:50 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் அகமது நகரில் உலக புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த 80 வயது டாக்டர் ரூ.33 லட்சம் மதிப்புள்ள 707 கிராம் தங்க கிரீட காணிக்கையை வழங்கி உள்ளார். அதில் 35 கிராம் அமெரிக்க வைர கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை கோவில் அறக்கட்டளை நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தங்க கிரீட காணிக்கையை வழங்கிய டாக்டரின் பெயர் மந்தா ராமகிருஷ்ணா. இதுபற்றி அவர் கூறுகையில், 1992-ம் ஆண்டு எனது மனைவியுடன் இங்கு வந்து வழிபட்டேன். அப்போது அர்ச்சகர் ஒருவர் ஒரு கிரீடத்தை காண்பித்து, இதுபோன்ற கிரீடத்தை காணிக்கையாக வழங்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது என்னிடம் பணம் இல்லை. தங்க கிரீட காணிக்கை வழங்க வேண்டும் என்று எனது மனைவியிடம் கூறி வந்தேன். எனது பணி ஓய்வுக்கு பிறகு அமெரிக்காவில் பணியை தொடர்ந்து பணம் சம்பாதித்தேன். அந்த பணத்தை வைத்து தற்போது எனது காணிக்கையை சாய்பாபா பாதத்தில் சமர்ப்பித்து உள்ளேன். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் எனது மனைவி என்னுடன் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்து விட்டார்" என்று உருக்கமாக கூறினார்.

டாக்டர் மந்தா ராமகிருஷ்ணா காணிக்கை செலுத்தி விட்டு புகைப்படம் எடுத்தபோது, மனைவியின் புகைப்படத்தை கையில் வைத்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்