மகாபலேஸ்வரர் நகரில் தசரா ஊர்வலத்தில் 9 குழந்தைகள் தீயில் கருகினர் - ஜெனரேட்டர் தீப்பற்றியதால் விபரீதம்

மகாபலேஸ்வரர் நகரில் நடந்த தசரா ஊர்வலத்தில் ஜெனரேட்டர் தீப்பற்றியதால் 9 குழந்தைகள் தீக்காயம் அடைந்தனர்.

Update: 2023-10-25 18:45 GMT

மும்பை, 

மகாபலேஸ்வரர் நகரில் நடந்த தசரா ஊர்வலத்தில் ஜெனரேட்டர் தீப்பற்றியதால் 9 குழந்தைகள் தீக்காயம் அடைந்தனர்.

துர்கா தேவி சிலை ஊர்வலம்

நவராத்திரி விழாவையொட்டி மராட்டியத்தில் பொதுமக்கள் ஏராளமான இடங்களில் துர்கா தேவிக்கு பந்தல் அமைத்து வழிபட்டு வந்தனர். நவராத்திரி நிறைவு நாளான நேற்று முன்தினம் பந்தல்களில் வைக்கப்பட்டு தேவி சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. அந்த வகையில் சத்தாரா மாவட்டம் மகாபலேஸ்வரர் நகரில் உள்ள ஹோலி ஆலி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு தேவி சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அந்த வாகனத்தின் ஓரத்தில் குழந்தைகள் அமர்ந்து இருந்தனர். அப்போது வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்த ஜெனரேட்டர் திடீரென தீப்பற்றியது. அருகில் பெட்ரோல் கேன் இருந்ததால் தீ அதில் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் வாகனத்தில் இருந்த குழந்தைகள் மீதும் தீ பரவியது. அந்த குழந்தைகள் வலி தாங்க முடியாமல் கதறினர். அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் பணியிலும், குழந்தைகளை மீட்கும் பணியிலும் துரிதமாக ஈடுபட்டனர். தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை முழுவதுமாக கட்டுப்படுத்தினர்.

9 குழந்தைகள் தீக்காயம்

மேலும் தீயில் கருகிய நிலையில் 9 குழந்தைகள் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தாரா மற்றும் புனே நகரில் உள்ள வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீக்காயம் அடைந்த குழந்தைகள் உடல்நலம் சீராக இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சமீர் சேக் கூறினார். அதிக சூடானதால் ஜெனரேட்டர் தீப்பற்றியது தெரியவந்தது. இதுபற்றி மகாபலேஸ்வர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தசரா ஊர்வலத்தில் ஜெனரேட்டர் தீப்பற்றி 9 குழந்தைகள் தீக்காயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்