முன்னாள் மந்திரி கூறுவதை போல பள்ளிகளில் சரஸ்வதி கடவுள் படத்தை அகற்ற முடியாது- முதல்-மந்திரி ஷிண்டே அறிவிப்பு

பள்ளிகளில் சரஸ்வதி கடவுள் படத்தை அகற்ற முடியாது என்று முதல்-மந்திரி ஷிண்டே கூறியுள்ளார்.

Update: 2022-09-29 05:00 GMT

மும்பை,

பள்ளிகளில் சரஸ்வதி கடவுள் படத்தை அகற்ற முடியாது என்று முதல்-மந்திரி ஷிண்டே கூறியுள்ளார்.

சாவித்ரி பாய் புலே

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான சகன் புஜ்பால் இந்த வார தொடக்கத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சமூக சீர்திருத்தவாதிகளான சாவித்ரி பாய் புலே, ஜோதிபா புலே, சாகு மகாராஜ், பாவுராவ் பாட்டீல் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் உருவப்படங்களை பள்ளிகளில் வைக்க வேண்டும்.

ஆனால் இந்த சீர்திருத்தவாதிகளின் படங்களுக்கு பதிலாக சரஸ்வதி, சாரதா போன்ற கடவுள்களின் படங்கள் பள்ளிகளில் வைக்கப்படுகின்றன. நாங்கள் இவர்களை பார்த்ததில்லை. அவர்கள் எங்களுக்கு எதையும் கற்றுதரவில்லை. அவர்கள் கற்பித்தாலும், எங்களை 3 சதவீதம் பேர் கல்வி கற்பதில் இருந்து ஒதுக்கி வைத்தனர். நாங்கள் ஏன் அவர்களுக்கு முன்பு பிரார்த்தனை செய்ய வேண்டும்?

இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முதல்-மந்திரி பதில்

இந்த நிலையில் பள்ளிகளில் இருந்து சரஸ்வதி போன்ற தெய்வங்களின் உருவப்படங்களை அகற்ற முடியாது என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் கூறியுள்ளார்.

இதுகுறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அறிவின் தெய்வம்

பள்ளிகளில் இருந்து எந்த புகைப்படங்களும் அகற்றப்படாது. சிலர்(சகன் புஜ்பால்) எதை வேண்டுமானால் உணர்ந்துகொள்ளட்டும். அவர்களின் விருப்பப்படி நாங்கள் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் சாதாரண மக்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்கிறோம்.

தேவைப்பட்டால் முக்கிய தேசிய தலைவர்கள் படங்களை பள்ளிகளில் வைக்கலாம். ஆனால் சரஸ்வதி தேவியின் புகைப்படம் அகற்றப்படாது. சரஸ்வதி தேவி அறிவின் தெய்வம். நமது கலாசாரம் மற்றும் இந்துத்துவத்தை ஏற்காதவர்கள் தான் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் நாசிக்கில் உள்ள சகன் புஜ்பாலின் பண்ணை வீட்டிற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்