புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் மரம் வளர்க்க இடம் ஒதுக்க வேண்டும்- மாநகராட்சி உத்தரவு
மும்பையில் புதிதாக 10 ஆயிரம் சதுர அடிக்குமேல் கட்டிடம் கட்டினால் மியாவாகி முறையில் மரம் வளர்க்க இடம் ஒதுக்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.;
மும்பை,
மும்பையில் புதிதாக 10 ஆயிரம் சதுர அடிக்குமேல் கட்டிடம் கட்டினால் மியாவாகி முறையில் மரம் வளர்க்க இடம் ஒதுக்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
மியாவாகி காடு வளர்ப்பு
அகிரா மியாவாகி என்ற ஜப்பானிய தாவரவியலாளர் உருவாக்கிய காடு வளர்ப்பு முறைதான் 'மியாவாகி காடு வளர்ப்பு' முறை. அகிரா மியாவாக்கி, இடைவெளியற்ற அடர்நடவு முறையில் மரங்களை நட்டு வளர்க்கும் முறையைக் கண்டுபிடித்தார். அவருடைய கூற்றுப்படி, குறைந்த பரப்பளவில் அதிகமான மரங்களை நட்டு வளர்க்க முடியும். அந்த முறையில் வளரும் மரங்கள் அதிவேகமாக வளர்வதையும் அவர் நிரூபித்துள்ளார்.
இந்தநிலையில் மியாவாகி காடு வளர்ப்பு முறையில் மரங்களை வளர்க்க மும்பையில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் இடம் ஒதுக்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
5 சதவீத இடம் ஒதுக்க வேண்டும்
இதுதொடர்பாக மும்பை மாநகராட்சி பூங்கா துறை கண்காணிப்பாளர் ஜித்தேந்திர பிரதேஷி கூறுகையில், "10 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள இடத்தில் கட்டிடங்கள் கட்டப்படும் போது அதில் 5 சதவீத நிலத்தை மியாவாகி முறையில் மரக்கன்றுகள் நட ஒதுக்க வேண்டும். கட்டுமான அதிபர்கள் கட்டிடம் கட்ட ஒப்புதல் பெறும் போது அவர்களுக்கு வழங்கப்படும் நிபந்தனைகளில் இதை சேர்க்க கமிஷனர் இக்பால் சகால் உத்தரவிட்டு உள்ளார்.
தேவைப்பட்டால் இது தொடர்பாக மாநகராட்சி கட்டுமான அதிபர்களுக்கு வழிகாட்டும்" என்றார்.