ரிலையன்ஸ் நிர்வாக குழுவில் முகேஷ் அம்பானியின் மகள், மகன்களுக்கு பதவி; மனைவி ராஜினாமா

ரிலையன்ஸ் நிர்வாக குழுவில் இருந்து முகேஷ் அம்பானியின் மனைவி விலகினார். அதே சமயத்தில் அவரது மகள், மகன்களுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-28 20:00 GMT

மும்பை, 

ரிலையன்ஸ் நிர்வாக குழுவில் இருந்து முகேஷ் அம்பானியின் மனைவி விலகினார். அதே சமயத்தில் அவரது மகள், மகன்களுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது.

மனைவி, வாரிசுகள்

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானி பதவி வகித்து வருகிறார். அவருடைய மனைவி நீட்டா அம்பானி, அந்நிறுவனத்தின் உயர்நிலை நிர்வாக குழுவில் இடம்பெற்று இருந்தார். முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, ரிலையன்சின் துணை நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ரீடெய்ல்சின் தலைவராக இருக்கிறார். மகன் ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ தலைவராகவும், மற்றொரு மகன் ஆனந்த் அம்பானி, ரிலையன்ஸ் டிஜிட்டல் சர்வீசஸ் தலைவராகவும் இருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த துணை நிறுவனத்தின் நிர்வாக குழுவிலும் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், தாய் அமைப்பான ரிலையன்ஸ் உயர்நிலை நிர்வாக குழுவில் அவர்கள் இடம்பெறாமல் இருந்தனர்.

ராஜினாமா

இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயர்நிலை நிர்வாக குழு கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. அதில், நிர்வாக குழு இயக்குனர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி விலகினார். அவரது ராஜினாமாவை நிர்வாக குழு ஏற்றுக்கொண்டது. இருப்பினும், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் என்ற முறையில், நிர்வாக குழு கூட்டங்களில் நிரந்தர அழைப்பாளராக ரீட்டா அம்பானி தொடர்ந்து பங்கேற்பார் என்று நிர்வாக குழு அறிவித்தது.

இயக்குனர்

மேலும், முகேஷ் அம்பானியின் வாரிசுகளான ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, இஷா அம்பானி ஆகியோரை நிர்வாக குழுவில் இயக்குனர்கள் (நான்-எக்சிகியூட்டிவ் டைரக்டர்) பதவியில் சேர்க்க பங்குதாரர்களுக்கு நிர்வாக குழு சிபாரிசு செய்தது. இந்த சிபாரிசுக்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டி இருக்கிறது. அதன்பிறகு, முகேஷ் அம்பானி வாரிசுகள் அப்பொறுப்பை ஏற்கும் நாளில் இந்த நியமனம் அமலுக்கு வரும் என்று நிர்வாக குழு கூறியுள்ளது. பின்னர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் நடந்தது. அதில், முகேஷ் அம்பானியின் வாரிசுகளுக்கு பதவி அளித்ததற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு, வாரிசுகள் கையில் பொறுப்பை ஒப்படைக்கும் செயலாக கருதப்படுகிறது.

முகேஷ் அம்பானி பேச்சு

ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில், முகேஷ் அம்பானி பேசியதாவது:- ரிலையன்ஸ் நிறுவனம், சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து, அதை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், மொத்தம் 150 கோடி பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. உருவாகி வரும் புதிய இந்தியாவுக்கு முன்னோடியாக ரிலையன்ஸ் திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்