உணவு டெலிவிரி ஊழியர்கள் போல வேடமிட்டு நகை பறிப்பு திருடர்களை பிடித்த போலீசார்
உணவு டெலிவிரி ஊழியர்கள் போல வேடமிட்டு 3 நாட்கள் காத்திருந்து போலீசார் நகை பறிப்பு திருடர்களை கைது செய்த சம்பவம் நடந்து உள்ளது.;
மும்பை,
உணவு டெலிவிரி ஊழியர்கள் போல வேடமிட்டு 3 நாட்கள் காத்திருந்து போலீசார் நகை பறிப்பு திருடர்களை கைது செய்த சம்பவம் நடந்து உள்ளது.
காத்திருந்து பிடித்த போலீசார்
மும்பை சஞ்சய் காந்தி நேஷனல் பார்க் பகுதியில் உள்ள ரோட்டில் கடந்த 14-ந் தேதி தொழில் அதிபர் ஒருவர் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். இதில் ஒரு பாலத்தின் கீழ் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின்பேரில் கஸ்துர்பா மார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் மூலம் போலீசார் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர்களின் மோட்டார் சைக்கிள் விட்டல்வாடி ரெயில் நிலையம் அருகே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் திருடனை பிடிக்க அந்த பகுதியில் உணவு டெலிவிரி செய்யும் ஊழியர்கள் போல வேடமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் 3 நாட்களுக்கு பிறகு மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த நகைபறிப்பு திருடன் பிரோஷ் சேக்கை கைது செய்தனர்.
15 வழக்குகளில் தொடர்பு
மேலும் விசாரணையில் அவருடன் சேர்ந்து நகைப்பறிப்பில் ஈடுபட்டது அம்பிவிலி இரானி செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த ஜாபர் ஜப்ரி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆட்டோவில் சென்று ஜாபர் ஜப்ரியை கைது செய்தனர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 300 பேர் போலீசார் வந்த ஆட்டோவை சூழ்ந்து ஜாபர் ஜப்ரியை போலீஸ் நிலையம் கொண்டு செல்லவிடாமல் தடுத்தனர். எனினும் டிரைவர் சினிமா பாணியில் மின்னல் வேகத்தில் ஆட்டோவை ஓட்டி போலீசார் கைதியுடன் ஊரைவிட்டு வெளியே வர உதவினார்.
கைது செய்யப்பட்ட ஜாபர் ஜப்ரி மீது 15 வழக்குகள் இருப்பதாக போலீசார் கூறினர்.