காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மராத்தா சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு - நானா படோலே உறுதி

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மராத்தா சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று நானா படோலே கூறினார்.

Update: 2023-09-08 19:30 GMT

நாக்பூர், 

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மராத்தா சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று நானா படோலே கூறினார்.

வன்முறை

ஜல்னாவில் மராத்தா இடஒதுக்கீடு கேட்டு நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து, போலீசார் தடியடி நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சாதிவாரி கணக்கெடுப்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்குவதற்கும், நீதி வழங்குவதற்கும் ஒரே வழி சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டும்தான். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இதுபோன்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை கடந்த 2011-ம் ஆண்டு மேற்கொண்டது. ஆனால் 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டு நடத்தவில்லை. அதாவது பா.ஜனதா அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏற்கவில்லை.

மணிப்பூர் சூழ்நிலை

மராட்டியம் மற்றும் மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மராத்தா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று 2014-ம் ஆண்டு தேர்தலின்போது, தேவேந்திர பட்னாவிஸ் வாக்குறுதி அளித்திருந்தார். மேலும் தங்கர் சமூகத்திற்கும் இடஒதுக்கீடு வழங்குவதாக தெரிவித்தனர். தற்போது இந்த அரசு இதர பிற்படுத்தப்பட்டவர்கள், மராத்தா சமுதாயத்திற்கு இடையே பிரச்சினையை எழுப்புகின்றனர். மணிப்பூரில் அவர்கள் செய்ததை தான் தற்போது மராட்டியத்திலும் செய்ய முயற்சிக்கின்றனர். மராட்டிய மக்கள் பகுத்தறிவுள்ளவர்கள், அவர்கள் ஆளும் கட்சியின் இந்த வலையில் சிக்க மாட்டார்கள். மணிப்பூர் சூழ்நிலையை மராட்டியத்தில் அனுமதிக்க மாட்டார்கள். பா.ஜனதா சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிரானது. அவர்களால் ஒருபோதும் இடஒதுக்கீடு வழங்க முடியாது.

தெளிவான நிலைப்பாடு

இருப்பினும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். நாங்கள் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சிக்கு வந்தால், மற்ற சமூகத்தின் இடஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை உயர்த்தி மராத்தா சமுகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதே எங்களின் நிலைப்பாடாக இருக்கும். காங்கிரஸ் தலைமையிலான அரசு அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதி மக்களையும் பிரதான நீரோட்டத்திற்குள் கொண்டுவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்