கல்லறைக்குள் கண்கவரும் உயிரோவியங்கள்

பெருவெடிப்பில் உதயமாகி, படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்ற உயிரினங்கள் அனைத்தும், பின் ஒரு காலத்தில் எப்போதோ ஏற்பட இருக்கும் ஒரு பேரழிவால் ஒட்டுமொத்தமாக அஸ்தமனமாகிவிடும் என்ற பிரபஞ்சக் கோட்பாடு பயணத்தில், இதுவரை நாம் கடந்து வந்த பாதையின் வீச்சு மிக நெடியது.;

Update:2019-01-06 11:25 IST
வழி முழுவதையும் விழுங்கியபடி செல்லும் நீண்ட தார்ச்சாலை, தொடுவானத்தைத் தொட முயன்று போய்க்கொண்டே இருப்பது போல, மனித குல வரலாற்றுச்சுவடு வியப்புடன் விசாலமாக விரிந்தபடி பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

நாளைக்கு நடைபெறப் போவது என்ன என்ற சூட்சுமம், எவருக்கும் இன்றைக்குப் பிடிபடாது என்றாலும், வருங்காலம் என்பது நித்தியமானது என்ற மயக்கம், அனைவரையும் எதிர்பார்ப்புகளுடன் சொக்க வைத்து இருக்கிறது.

ஆனால், கடந்த காலம் என்பது, ஏற்கனவே அரங்கேறிய ஏராளமான ரகசியங்களை உள்ளடக்கியது.

அந்த மர்மப் பூட்டை உடைத்தெறிந்து, ஆதி மனித இனம் தடம் பதித்து விட்டுச் சென்ற பாதை எது என்பதைத் தேடுவது சுவாரசியமானது.

முகம் தெரியாத அந்தப் பாதை, வானத்துக் கருங்குழியாக, கரிய இருள் போர்வைக்குள் சுருண்டு கிடக்கும் மர்மப்பிரதேசம்.

பார்வையற்றவர், நடந்து போகும் போது கைகளால் காற்றில் நீந்திச் செல்வது போல, இருள் சூழ்ந்த கடந்த காலத்தின் ஆதாரங்களைத் தேடி அலைந்தால் மட்டுமே அவற்றின் வால்பிடித்து, முன்னேறிச்சென்று அன்றைய காலகட்டத்தை ஓரளவுக்கு ஆராய முடியும்.

அதற்கான உந்து சக்தி, ஏதோ சிலரின் ரத்த அணுக்களில் துடிக்காமல் இருந்திருந்தால் ஆதிச்சநல்லூர், கீழடி போன்றவை இன்றைக்கு புதைகுழிக்குள் இருந்து வெளிப்பட்டு இருக்க முடியாது.

காலமும், பூமியும் சேர்ந்து விழுங்கிய பழங்கால வரலாறு, மண்ணுக்குள் சிதைந்து உருத் தெரியாமல் கரைந்துபோய் இருக்கும்.

என்றோ தொலைந்து போய்விட்ட கடந்த காலத்தின் தேடுதல் வேட்டைக்காக, காலத்தின் பின் நோக்கிப் பாய எத்தனிப்பவர்களுக்கு, ஆர்வம் அவசிய தேவை என்றாலும், அதற்கான களம் கண்ணில் தென்பட்டால் மட்டுமே அவர்களது பணி எளிதாக முடிவடையும்.

அதுபோன்ற களத்தின் சொர்க்கபுரியாக இருப்பது எகிப்து நாட்டின் வறண்ட பாலைவனப் பிரதேசம்.

அங்கே 1922-ம் ஆண்டில் ‘லக்சார்’ என்ற நகரின் அருகே நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இளவயது மன்னர் டூடங்காமுன் கல்லறையும் அவரது மம்மியும், பல அதிசய தகவல்களை வெளியிட்டதோடு, அங்கே எடுக்கப்பட்ட மன்னர் டூடங்காமுன் மம்மியின் தங்க கவசம், எகிப்தின் முக அடையாளமாக இப்போது ஆக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 4 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு எகிப்தில் ‘பரோ’ என்ற மன்னர் குலம் ஆட்சி செய்ததற்கான ஆதாரங்களும், அவர்களது கல்லறைகளும், பிரமிக்க வைக்கும் பிரமிடுகளும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றாலும், அங்கே கடந்த மாதம் நடைபெற்ற ஓர் அகழ்வாராய்ச்சி, புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

கெய்ரோ நகரின் தென் பகுதியில், பரோ மன்னர்கள் பலரின் நினைவுச்சின்னங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதே பகுதியில் மேலும் ஒரு பெரிய கல்லறை இருப்பது கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி தெரிய வந்தது.

பல நாட்டு தூதர்கள், முக்கிய அதிகாரிகள், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அந்தக் கல்லறை திறக்கப்பட்டது.

அது மண்ணுக்குள் 16 அடி ஆழத்தில் இருந்தது. கல்லறையின் வாசல் குறுகலானது. அந்தக் கதவில் பொறிக்கப்பட்ட ‘வஹ் டீ’ என்ற பெயர், அந்தக் கல்லறை வஹ் டீ என்பவரின் சமாதி இடம் என்பதை பறைசாற்றியது.

‘அரசின் புனித பூசாரி’, ‘அரசின் கண்காணிப்பாளர்’, ‘புனித படகின் காவலர்’ என்ற அவரது பட்டங்களும் அந்தக் கதவில் பொறிக்கப்பட்டு இருந்தன.

10 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரம் என்ற செவ்வக வடிவில் அந்தக் கல்லறை அமைக்கப்பட்டு இருந்தது.

எகிப்து 5-ம் பேரரசின் 3-வது மன்னர் நெபரிர்கரே ககாய். இவரது ஆட்சிக்காலம், கி.மு.2446 முதல் கி.மு. 2438 ஆகும். அவரது ஆட்சியின் போது புனித சடங்குகளை நடத்தும் பிரபலமான பூசாரியாக இருந்தவர் தான் வஹ் டீ.

எகிப்து நாட்டு அரசர்கள், கடவுளை திருப்திப்படுத்துவது மிக முக்கியம் என்ற எண்ணம் கொண்டவர்கள். எனவே, அதற்கான வழிபாடு நடத்தும் பூசாரி, ஆட்சியாளர்களாலும் பொதுமக்களாலும் அதிகம் போற்றப்பட்டவராக இருந்தார்.

அப்படிப்பட்ட தலைமை பூசாரி வஹ் டீ, ஆட்சி அதிகாரத்துடன் மிக நெருக்கமாக இருந்த காரணத்தால், அவரது மறைவுக்குப் பிறகு பிரமாண்டமான கல்லறை கட்டப்பட்டது.

அந்தக் கல்லறை, இப்போது பழங்காலத்திய அதிசயங்களை வெளிப்படுத்தும் தகவல் பெட்டகமாக ஆகி இருக்கிறது.

கல்லறையைத் திறந்து முதன் முறையாக உள்ளே நுழைந்த அதிகாரிகளும், அகழ்வாராய்ச்சியாளர்களும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

அந்தக் கல்லறை இரண்டு அடுக்குகளைக் கொண்டது. மேல் அடுக்கில் 24 சிலைகளும், கீழ் அடுக்கில் 31 சிலைகளும் உள்ளன. அந்தச் சிலைகள் பெரும்பாலும், அந்தப் பூசாரியின் மனைவி, தாயார் மற்றும் உறவினர்களின் சிலைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அவர் தனது தாயார் மீது அதீத அன்பு வைத்து இருக்க வேண்டும். கல்லறையின் பல இடங்களில் அவரது தாயார் பெயர் ‘மெரிட் மீன்’ என்று குறிக்கப்பட்டு இருக்கிறது.

சிலைகள் அனைத்தும் வண்ணம் பூசப்பட்டவை. அவற்றில் சில ஆளுயரத்திலும் மற்றவை சிறியதாகவும் இருக்கின்றன.

பூசாரி வஹ் டீ, தனது தாயுடன் இருப்பது போன்ற சிலை, கடந்த காலத்தில் எகிப்து நாட்டு ஆண்கள் எப்படி இருந்தார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

வஹ் டீ யின் சிலை கருமை நிறத்திலும், அவர் அருகே நிற்கும் அவரது தாயார் சிலை வெளிர் நிறத்திலும் அமைக்கப்பட்டு உள்ளன.

அந்தக் காலத்திய எகிப்து நாட்டு ஆண்கள், வெளியே வெயிலில் சென்று உழைத்ததால் அனைவரும் கருமையாக இருந்தார்கள்; பெண்கள் வீடுகளிலேயே இருந்ததால் வெளிர் நிறத்தில் காணப்படுவார்கள் என்பதற்கு அத்தாட்சியாக அந்தச் சிலைகள் இருக்கின்றன.

இவ்வாறு ஆண், பெண் நிற வித்தியாசம் கூட அந்தச் சிலைகளில் பதிவு செய்யப்பட்டு இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கல்லறை சுவர் முழுவதும் ஏராளமான வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பானை மற்றும் ஒயின் தயாரிப்பு, வேட்டையாடுதல், படகுப் பயணம், புனிதச் சடங்கு செய்தல் போன்ற அந்தக் கால எகிப்து மக்களின் அன்றாட வாழ்வைச் சித்தரிக்கும் அந்த ஓவியங்கள் கண்ணைப் பறிக்கின்றன.

மரணத்திற்குப் பிறகு உள்ள மறு உலக வாழ்க்கை முறை, அங்கே அவர்களுக்கு உணவு தயாரிப்பது, இறந்தவர்களுக்குக் காணிக்கை செலுத்துவது போன்ற காட்சிகள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.

அந்தக்கால எகிப்தியர்கள் பயன்படுத்திய சித்திர எழுத்துக்களும் ஏராளம் உள்ளன.

ஓவியங்களும், சிலைகளும், இப்போதுதான் தயாரிக்கப்பட்டன என்பது போல, புதுப் பொலிவுடன் காணப்படுவது வியப்பின் உச்சம்.

4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தியவை என்ற போதிலும் ஓவியங்கள் அனைத்தும் புத்தம் புதியதுபோல உயிரோட்டத்துடன் இருப்பது எப்படி என்ற வியப்பான வினாவுக்கு விடை காணமுடியவில்லை.

புதையல் வேட்டையாளர்களால் கொள்ளை யடிக்கப்படாத, சேதாரம் இல்லாத, உயிர்த் துடிப்பான ஓவியங்கள், சிலைகள் கொண்ட இந்தக் கல்லறை போன்ற ஒன்று, இதுவரை கண்டுபிடிக்கப்படாதது என்பது அகழ்வாராய்ச்சியாளர்களின் அத்தாட்சிச் சான்றிதழ் ஆகும்.

பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் அந்த ஓவியங்களின் வண்ணம் சிறிதும் மாறாமல் புதுக் கருக்குடன் இருப்பது எப்படி என்ற ஆய்வு இப்போது மேற்கொள்ளப்பட இருக்கிறது.

கல்லறைக்குள் மொத்தம் 5 சிறிய அறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று திறந்த நிலையில் இருக்கிறது. அந்த அறையில் எதுவும் காணப்படவில்லை. மற்ற 4 அறைகளும் விரைவில் திறந்து பார்க்கப்பட உள்ளன. அப்போது மேலும் பல ரகசியங்களுக்கான முடிச்சுகள் அவிழ்க்கப்படலாம்.

இது தொடர்பாக இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள ஆய்வு, எகிப்து நாட்டின் பழங்கால வாழ்க்கை முறை எப்படி இருந்தது?, 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழியாத வண்ண ஓவியங்களை எவ்வாறு தீட்டினார்கள்? என்பது உள்பட பல அதிசய தகவல்களுக்கான வாசல் கதவாக அமையும் என்று அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே, அந்தப் பாலைவனப் பிரதேசத்தில், மேலும் பல அதிசயங்கள் பூமிக்குள் இருந்து விரைவில் வெளியே வரும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் செய்திகள்