2.40 லட்சம் டன் பருப்பு உற்பத்தி
2018-19-ஆம் நிதி ஆண்டில் 2.40 லட்சம் டன் பருப்பு உற்பத்தி;
நம் நாட்டில் கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில், அளவு அடிப்படையில் 2.40 லட்சம் டன் பருப்பு உற்பத்தி ஆகி இருக்கிறது.
இந்தியா முதலிடம்
பருப்பு உற்பத்தி, இறக்குமதி மற்றும் நுகர்வில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பருப்பு உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. மழையை நம்பி இருக்கும் பகுதிகளில்தான் பெரும்பாலும் பருப்பு அதிகம் பயிரிடப்படுகிறது.
2016-17-ஆம் நிதி ஆண்டில், 1.63 கோடி டன் பருப்பு உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் அது 2.52 கோடி டன்னாக உயர்ந்தது. கடந்த நிதி ஆண்டில் (2018-19) உற்பத்தி 2.59 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. எனினும் 2.40 கோடி டன் மட்டுமே உற்பத்தி ஆகி இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 4.7 சதவீதம் குறைவாகும். எனினும், 2016-17-ஆம் ஆண்டை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் பருப்பு நுகர்வு ஆண்டுக்கு சுமார் 2.50 கோடி டன் என்ற அளவில் இருக்கிறது. அண்மைக் காலம் வரை உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய அதிக அளவில் பருப்பு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.
தற்போது போதுமான அளவிற்கு உற்பத்தி இருந்தும் குறைந்த அளவில் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை உள்ளது. எனினும், பருப்பு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்து வருவதால் இனி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறப்படுகிறது.
2017-18-ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 56.50 லட்சம் டன் பருப்பு இறக்குமதி ஆனது. முந்தைய நிதி ஆண்டில் அது 66.50 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, அளவு அடிப்படையில் பருப்பு இறக்குமதி 15 சதவீதம் குறைந்தது.
கடந்த நிதி ஆண்டில் 25 லட்சம் டன் பருப்பு இறக்குமதி ஆகி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 11 மாதங்களில் (2018 ஏப்ரல்-2019 பிப்ரவரி) இறக்குமதி 22 லட்சம் டன்னாக உள்ளது. இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டில் (2019-20) இறக்குமதி 68 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்து வருவதே இதற்கு காரணமாகும்.
இந்தியாவில், நடப்பு நிதி ஆண்டில் (2019-20) பருப்பு உற்பத்தி 2.8 சதவீதம் அதிகரித்து 2.35 கோடி டன்னாக இருக்கும் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் மதிப்பீடு செய்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் குறைவாகும்.
அதிகரிக்க நடவடிக்கை
பருப்பு மகசூலை அதிகரிக்கவும், புரதம் நிறைந்த பருப்பு வகைகளின் நுகர்வை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2020-21-க்குள் பருப்பு உற்பத்தியை 2.40 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முன்னதாகவே இந்த இலக்கு எட்டப்பட்டு விட்டது. முந்தைய நிதி ஆண்டில் (2017-18) பருப்பு விளைச்சல் 2.52 கோடி டன்னை தாண்டி இருந்தது.