தண்டவாளமும், தன்னம்பிக்கையும்...!

தண்டவாளம் என்ற சொல் காதில் விழுந்தவுடன் நமது கண்முன் வருவது இணைபிரியாமல் இணைந்தே செல்லும் இரு தடங்கள்;

Update:2019-04-30 12:46 IST
ஒரு தடத்தில் விரிசல் வந்தாலும் தண்டவாளத்தின் மேல் செல்லும் ரெயில் வண்டித் தடம் புரண்டுவிடும். வாழ்க்கையில் கடும் முயற்சியும் தன்னம்பிக்கையும் தண்டவாளங்கள் போல இணைபிரியாமல் செல்லும் போது தான் அதன் மேல் செல்லும் நம் வாழ்க்கை நாம் எதிர்பார்க்கும் லட்சிய இலக்கை சென்றடையும்.

சமீபத்தில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவு வந்தபோது ஒரு மாணவி மதிப்பெண் குறைவாக வாங்கிய காரணத்தினால் மனவெறுப்பு ஏற்பட்டு தண்டவாளத்தில் ஓடும் ரெயில் முன் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அந்தக் குழந்தையின் குடும்பத்தை பாதித்த அளவு என்னையும் பாதித்தது என்றால் அது மிகையில்லை.

வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கும், தற்கால பின்னடைவுகளுக்கும் தற்கொலை முடிவல்ல என்பது பலருக்குத் தெரிந்தாலும் கணநேர தவறான முடிவால் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் மனிதர்களின் எண்ணிக்கைக் குறையவில்லை. தமிழ்நாட்டில் ஒரு வருடத்தில் சாரசரியாக 500 பேர் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். குறிப்பாக, சிறுவர்கள் தற்கொலை செய்யும் போது ஒரு தனி நபரின் எதிர்காலம் மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்தின் எதிர்காலக் கனவுகளும் தரைமட்டமாகி விடுகின்றன.

ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியினுடைய உண்மைக் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு இளைஞன் தன் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் இந்தியக் குடிமைப்பணி தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டுமென முயற்சி செய்து படிக்கிறான். கடுமையான முயற்சிக்குப் பின் தேர்வு எழுதி முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். திடீரென ஒரு நாள் தேர்வு முடிவு வெளி வருகிறது. தன் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் இல்லாததால் மனச்சோர்வு ஏற்பட்டு வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்காக தண்டவாளத்தில் நடந்து செல்கிறான், திடீரென ஒருவரின் குரல் பின்னால் இருந்துக் கேட்கவும் திரும்பிப்பார்க்கிறான். ஒரு தலைப்பாகை அணிந்த சர்தார்ஜி ஒருவர் அந்த இளைஞனைப் பார்த்து “என்னப்பா, உன்னைப் பார்த்தால் ஏதோ ஏமாற்றம் அடைந்தவன் போலத் தெரிகிறதே என்றுக் கேட்டார்”. உடனே அந்த இளைஞன் சிறிது தயக்கத்துடன் தன் கதையை சொல்கிறான். சொன்ன உடனே அந்த சர்தார்ஜி அந்த இளைஞனுக்குத் தண்டவாளத்தைக் காட்டி, இந்தத் தண்டவாளம் எத்தனையோ பேரை அவர்கள் சேரவேண்டிய இடத்திற்கு கொண்டுபோய் சேர்க்கிறது. அந்தத் தண்டவாளத்தில் நீ வாழ்வை முடித்துக் கொள்ளக்கூடாது; ஒரு புது வாழ்க்கையைத் தன்னம்பிக்கையுடன் தொடர வேண்டும் என்று சொன்னதோடு தன் கையில் போட்டிருந்த ‘கடா’(காப்பு)ஐ கொடுத்து எப்போதெல்லாம் உனக்கு மனச் சோர்வு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இதைப் பார்த்து தன்னம்பிக்கையோடு செயல்படு; கண்டிப்பாக வெற்றி பெறுவாய் என்று சொன்ன அந்த வார்த்தைகள் அந்த இளைஞரின் வாழ்க்கையையேப் புரட்டிப் போட்டது.

அவர் கடின உழைப்போடு தன்னம்பிக்கையையும் சேர்த்து உழைத்ததன் பலனாக அடுத்தமுறை (கடைசிமுறை) வெற்றி பெற்று ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு பெற்று இன்று பணி ஓய்வுப் பெற்று சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த ஐ.பி.எஸ். அதிகாரி கடைசி வரை அந்த சர்தார்ஜியை அதற்குப் பின் பார்க்கவில்லை. ஆனால் அவர் நினைவாக இன்றுவரை அந்த ‘கடா’(காப்பு)ஐ கையில் அணிந்து வருகிறார்.

பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதுவே ஒரு முடிவான கட்டம் இல்லை. இன்னொரு ஐ.பி.எஸ். அதிகாரி தேனி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து பன்னிரெண்டாம் வகுப்பில் மிகக் கடுமையாக உழைத்தும் சரியான மதிப்பெண் பெற முடியாததால் விரக்தியில் யாருமே விருப்பப்பட்டு சேராத ஒருக் கல்லூரியில் யாருமே எடுக்காத ஒரு பாடத்தைப் படித்து அதன் பின்பு அதில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக ஐ.பி.எஸ். தேர்வில் அந்தப் பாடத்தை எடுத்து இன்று மிகப் பெரியப் பொறுப்பில் இருக்கிறார். இது போன்ற தன்னம்பிக்கையால் வெற்றி பெற்றவர்களின் கதைகள் ஏராளம்! ஏராளம்!! நான் கூட வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வங்கி அலுவலராகப் பணிபுரியும் போது ரெயில் நிலையத்தில் நடைமேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டு தண்டவாளத்தில் செல்லும் ரெயில்களைப் பார்த்து இந்த ரெயிலில் ஏதாவது ஒன்றில் தான் கூடிய சீக்கிரம் சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வுக்கு டெல்லி சென்று வெற்றி பெறுவேன் என்று எனக்குள் சொல்லிக் கொண்டே படித்த நாட்களை மறக்க முடியாது. நான் ஐ.பி.எஸ். தேர்ச்சிப் பெற்று இன்றுவரை ரெயில் தண்டவாளங்களை பார்க்கும் போதெல்லாம் வெற்றியும் அதற்குத் தேவையான தன்னம்பிக்கையும் தான் நினைவுக்கு வருகிறது.

ஆகவே, ரெயில் தண்டவாளம் என்பது வாழ்க்கையின் பாடம். அதைப் பார்க்கும் போது தன்னம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்ற எண்ணம் வர வேண்டும். தண்டவாளத்தில் ரெயில் செல்லும் போது சிக்னலுக்காக சில நேரம் நிறுத்தப்படும். ஆனால் ரெயில் அங்கேயே முடங்கிப் போவதில்லை. பச்சை விளக்கு வந்தவுடன் தன் இலக்கை நோக்கிப் பயணம் செய்யும். ஆகவே, தேர்வுத் தோல்வி, பின்னடைவு போன்ற சிக்னல் பிரச்சினைகளால் உங்கள் வாழ்வு முடிந்துவிடக்கூடாது காத்திருந்து பயணத்தைத் தொடருங்கள்! வெற்றி நிச்சயம்!! யாரேனும் தற்கொலை செய்யும் எண்ணத்தோடு தண்டவாளத்துக்கு வந்தால் தமிழ்நாடு இருப்புப்பாதைக் காவல் நிலைய எண் 1512-ஐ தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றிபெற வழியை நாங்கள் காட்டு கிறோம்.

வி.பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ். ரெயில்வே டி.ஐ.ஜி.

மேலும் செய்திகள்